தமிழ்நாடு

தினமணி செய்தி எதிரொலி: வாழப்பாடியில் 50 ஆண்டுகள் பழமையான வானொலி மைய கட்டடம் பராமரிப்பு

3rd Oct 2020 10:29 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி: தினமணியில் செய்தி வெளியானதின் எதிரொலியால், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பழுதடைந்து கிடந்த, 50 ஆண்டுகள் பழமையான வானொலி நிலைய கட்டடம் வெள்ளையடித்து பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு முன் வரை, அனைத்து தரப்பு பொதுமக்களும் தகவல் பெறவும், பொழுது போக்குவதற்கும் ஒரே தகவல் ஒலிரப்பு சாதனமாக விளங்கிய வானொலி பெட்டிகளின் பயன்பாடு தற்போது அடியோடு குறைந்து போனது. தகவல் ஒலிபரப்பில் வானொலி ஆற்றிய பங்கு குறித்து,  தற்கால சந்ததியினர் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், வாழப்பாடி பேரூராட்சியின் அப்போதைய வார்டு உறுப்பினராக இருந்த, மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் ஆ.குமரவேலன் முயற்சியால், 1969 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி,  வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. அப்போதைய பேரூராட்சி மன்ற தலைவர் பெரியசாமி கவுண்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்போதைய தமிழக தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி. நடராஜன் இந்த வானொலி ஒலிபரப்பு நிலையத்தை திறந்து வைத்துள்ளார். 

ADVERTISEMENT

50 ஆண்டுகள் கடந்து, இந்த வானொலி நிலைய கட்டடம் வானொலி ஒலிபரப்பின் வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இன்றளவும் கம்பீரமாய் காணப்படுகிறது.

பராமரிப்பிற்கு பிறகு புதுப்பொலிவு பெற்ற வானிலை ஒலிபரப்பு நிலைய கட்டடம்

தற்கால சந்ததியருக்கு தகவல் ஒலிபரப்பில் வானொலியின் முக்கியத்துவத்தை, எடுத்துரைக்கும் விதத்தில், இந்த வானொலி நிலைய கட்டடத்தை புதுப்பித்து நினைவுச் சின்னமாக மாற்றியமைக்கவும், இப்பகுதியில் பூங்கா அமைத்து தொடர்ந்து பராமரிக்கவும் மாவட்ட நிர்வாகமும், வாழப்பாடி பேரூராட்சியும்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்தது. 

இதுகுறித்து வாழப்பாடியில் வானொலி ஒலிபரப்பு நிலையம் அமைத்த மறைந்த பத்திரிக்கையாளர் ஆ.குமரவேலன் மகன் கு.கலைஞர்புகழ் பேட்டியுடன், தினமணி இணைய இதழில், கடந்த செப்டம்பர் 12 இல் படத்துடன் விரிவான செய்தி வெளியானது.

இதனையடுத்து, வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல் சாதிக் பாட்சா,  துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர், வானொலி மையத்தை மீட்டு பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 

முதற்கட்டமாக பழுதடைந்து கிடந்த வானொலி நிலைய கட்டடத்தை தூய்மைப்படுத்தி வெள்ளையடித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, வானொலி மையத்திற்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி, வானொலி நினைவுச்சின்னமாக மாற்றியமைக்க  நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT