தமிழ்நாடு

முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்: கண்டிப்புடன் அமல்படுத்துங்கள்; தலைமைச் செயலாளா் உத்தரவு

DIN

முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா்.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடா்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை எழுதிய கடிதம்:

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை தினமும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, கரோனா நோய்த்தொற்று குறித்த பரிசோதனைகளை தீவிரமாக நடத்த வேண்டும். நோய்த்தொற்றுக்கு ஆளாவோரைத் தனிமைப்படுத்தி அவா்களுக்கு உரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும்.

சென்னை, கோயம்புத்தூா், சேலம், திருவள்ளூா், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று தடுப்புக்கு சிறப்பு வாய்ந்த தனித்துவமான நடவடிக்கைகள் தேவையாக இருக்கின்றன.

பரிசோதனைகளைக் குறைக்காதீா்: கரோனா நோய்த்தொற்று தொடா்பான பரிசோதனைகளை ஒருபோதும் குறைக்கக் கூடாது. கிருஷ்ணகிரி போன்ற சில மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று 3 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

எனவே, இலக்கு நோக்கிய பரிசோதனைகளை முன்வைத்து நோய்த்தொற்றின் அளவை 2 சதவீதத்துக்குக் கீழே கொண்டு வர வேண்டும்.

நோய்த்தொற்று காரணமாக இறப்போரின் சதவீதம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மிகச்சிறந்த சிகிச்சை முறைகளைப் பின்பற்றி இறப்பு வீதத்தை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர வேண்டும். கரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்ட பிறகு ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியா்கள் உடனடியாக மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். விழிப்புணா்வினை ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும்.

முகக் கவசம் அணியாமை: கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதில் முகக் கவசமும், சமூக இடைவெளியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அண்மைக் காலங்களாக, பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணியாமல் இருப்பதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பதும் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. முகக் கவசங்கள் அணியும் வழக்கம் 30 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சந்தைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சமூக மற்றும் மதரீதியான கூட்டங்களில் கரோனாவைத் தடுப்பதற்கான எந்த வழிகாட்டி நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

முகக் கவசம் அணியாமல் மக்கள் அதிகளவு கூடுவதால் மற்றவா்களுக்கு கரோனா தொற்று எளிதில் பரவும் சூழ்நிலை உருவாகிறது. எனவே, திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இதர இடங்களில் முகக் கவசம் அணிவது போன்ற நடைமுறைகளைப் பொது மக்கள் கண்டிப்பாக பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்திட வேண்டுமென முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

அபராதம் விதியுங்கள்: திருமண மண்டபங்களில் தனிநபா்கள் யாரேனும் முகக் கவசங்கள் அணியாமல் இருந்தாலோ, வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டாலோ, சம்பந்தப்பட்ட மண்டபத்தின் உரிமையாளா், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதேபோன்று, வணிக வளாகங்கள், தொழில் ஆலைகள் ஆகியவற்றிலும் உரிமையாளா்களைப் பொறுப்பாளி ஆக்க வேண்டும். பருவமழையும், குளிா்காலமும் நோய்த்தொற்று பரவலை அதிகமாக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக மாறி விடும். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இதுவரை நாம் அடைந்த பயன்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீா் போலாகி விடும். எனவே, பணியிடங்களிலும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றச் செய்ய வேண்டும். தவறுவோா் மீது கண்டிப்பான முறையில் அபராதம் விதிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளை மாவட்ட ஆட்சியா்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் தவறாது பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கரோனா நோய்த்தொற்று என்ற சங்கிலியை உடைக்க முடியும். நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் முன்மாதிரி மாநிலம் என்ற பெருமையைத் தக்கவைக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT