தமிழ்நாடு

தமிழக எம்பி.க்களுக்கு ஹிந்தியில் கடிதம் அனுப்புவதை நிறுத்தக் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN


மதுரை: தமிழக எம்பி.க்களுக்கு ஹிந்தியில் கடிதம் அனுப்பாமல், ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப உத்தரவிடக் கோரி மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தாக்கல் செய்த மனு: மத்திய ரிசர்வ் படையில் குரூப் "பி' மற்றும் குரூப் "சி' பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிச. 20- இல் நடைபெறுகிறது. இதற்காக வடமாநிலங்களில் 5 இடங்களிலும், தென் மாநிலங்களில் 2 இடங்களிலும், மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கவில்லை.  தமிழகம், புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலனுக்காக இரு பகுதிக்கும் சேர்ந்து குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைக்கக் கோரி உள்துறை அமைச்சகத்துக்கும், சி.ஆர்.பி.எப். இயக்குநருக்கும் அக். 9-இல் கடிதம் அனுப்பினேன். 

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், நவ. 9 -இல் ஹிந்தியில் பதில் அனுப்பியிருந்தார். எனக்கு ஹிந்தி தெரியாததால், அதில் என்ன கூறியிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. ஹிந்தியில் பதில் அளித்தது சட்ட நடைமுறை மீறலாகும்.

1963 -ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டப்பிரிவு 3-இன்படி, ஒரு மாநிலம் ஹிந்தியை அலுவல் மொழியாக ஏற்காதபட்சத்தில் மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கு இடையே ஆங்கிலத்தைத் தான் அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில்  தற்போது வரை ஹிந்தியை அலுவல் மொழியாக ஏற்கவில்லை. தமிழையும், ஆங்கிலத்தையும் அலுவல் மொழிகளாக ஏற்று அதிகாரப் பூர்வமாகச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுடனான இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்ந்தும் வருகிறது.

மத்திய அரசின் அலுவல் தேவைகளுக்கும், நாடாளுமன்றத்தின் பயன்பாடுகளுக்கும் ஆங்கிலம் தொடர்வது பற்றி அலுவல் மொழிச் சட்டப் பிரிவு 3 (5) மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இதுதொடர்பாக உள்துறை இணை அமைச்சகத்துக்கு நவ. 19-இல் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் வரவில்லை. ஹிந்தியில் அனுப்பிய கடிதத்தைத்  திரும்பப் பெறவோ, ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹிந்தியில் மட்டுமே பதில் அளிக்கும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, தமிழக அரசுக்கும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கும் ஹிந்தியில் கடிதம் அனுப்பக்கூடாது. 

ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவிட வேண்டும். மேலும் எனக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர்  ஹிந்தியில் அனுப்பிய கடிதத்தின் ஆங்கில வடிவத்தை உடனே வழங்கவும், விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய உள்துறை அமைச்சர், அலுவல் மொழித்துறை இணைச் செயலர், சிஆர்பிஎப் இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர்  8- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் பிறழ் சாட்சியம்

டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 போட்டித் தோ்வு: மாவட்ட மைய நூலகத்தில் மாதிரித் தோ்வு

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: கு. செல்வப்பெருந்தகை

பாமகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

கல்வி சந்தைப் பொருளாகி விட்டது: சீமான்

SCROLL FOR NEXT