தமிழ்நாடு

வரதராஜபுரம் பகுதியில் மழைநீரை அகற்றும் பணி: எம்எல்ஏ ஆய்வு

28th Nov 2020 04:32 PM

ADVERTISEMENT

 

கனமழை காரணமாக அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை நான்காவது நாளாக சனிக்கிழமை  ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 

நிவர் புயல் காரணமாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பிடிசி காலனி, ராயப்பா நகர், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற  ராட்சஷ நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு இரவு பகலாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வரதராஜபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை நான்காவது நாளாக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 

ADVERTISEMENT

இதையடுத்து ராயப்பா நகர்ப் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு உணவு, போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். மேலும் மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர்ப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவாமல் இருக்க தூய்மைப்பணியிலும் எம்எல்ஏ கே.பழனி சனிக்கிழமை ஈடுபட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT