மன்னார்குடி நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிடக் கோரி, தொடர் பணிப்புறக்கணிப்பின் 2 ஆம் நாளான சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டுகளிலும் சேரும் குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள் 70 பேர், தற்காலிக ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் 80 பேர் என மொத்தம் 150 பேர் துப்புரவுப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதில் , ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத்தை ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்து அறிவிக்கும். அதன்படி நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு ஊதியத்தை வழங்கும்.
நிகழாண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி நாளொன்றுக்கு ரூ.291 லிருந்து 385 ஆக ஊதியத்தை உயர்த்தி மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதன்படி , நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியத்தை வழங்காததை கண்டித்து. சென்ற செப்டம்பர் மாதம் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்,மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன் நடந்தினர்.
இதனையடுத்து, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நகராட்சி நிர்வாகம் ஒரு மாத்திற்குள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
எனினும், இதுநாள் வரை ஊயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்காமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொண்டு வருவதை கண்டித்து. ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் கோரிக்கை நிறைவேறும் வகையில் பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராண்டாவது நாளான சனிக்கிழமை, நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கம் (சிஐடியு சார்பு) சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார், செயலர் பூண்டி மணி முன்னிலை வகித்தார்.
இதில் , சிஐடியு கெளரவத் தலைவர் ஜி.ரகுபதி ,மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஜகதீசன் , தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகரத் தலைவர் கே.பிச்சைக் கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.