தமிழ்நாடு

நிவர் புயலால் சேதடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம்: முதல்வர்

27th Nov 2020 08:36 PM

ADVERTISEMENT

நிவர் புயலால் சேதடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘நிவர்’ புயல் காரணமாக 302 குடிசை வீடுகள் முழுமையாகவும் 1,439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும். 
‘நிவர்’ புயல் காரணமாக, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில், 2064 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டு விட்டது.
‘நிவர்’ புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 108 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 2,927மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும்
பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை
மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் எனது தலைமையிலானஅரசு “நிவர்” புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 1220 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 275 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது வரை சுமார் 85,331 நபர்கள் இம் மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை மேற்கொண்டு வருகிறது.
வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது தவிர பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும் பெற்றுத் தரவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
அம்மா வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசு, சேதமடைந்த பகுதிகளை சீர்செய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT