தமிழ்நாடு

மூன்றாண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: மக்கள் மகிழ்ச்சி

27th Nov 2020 10:24 AM

ADVERTISEMENT


வேலூர்: நிவர் புயல் காரணமாக கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, மூன்றாண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்த தண்ணீர் பாலாற்றில் இணைந்து தற்போது கரைபுரண்டு செல்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ஆந்திரம் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் கடந்த பல ஆண்டுகளாகவே வறண்டு கிடக்கும் பாலாற்றில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு பிறகு பாலாற்றின் இருகரைகளையும் தொட்டபடி சுமார் 47 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்வது இம்மாவட்ட மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகம் மாநிலம் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திரம் மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது. தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும் ஆந்திரம் மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது. இதன்தொடர்ச்சியாக, பாலாற்றின் மணல் கொள்ளையும் தொடர் கதையாகி வருகிறது.

ஜீவ நதிகளில் ஒன்றான பாலாற்றின் மீண்டும் நீர்வரத்தை உறுதிப்படுத்திட தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பு மக்களும், விவசாயிகளும் கோரிக்கைகள் விடுத்துவரும் நிலையில் இப்பிரச்னைக்கு இன்னும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. இதனால், திருப்பத்தூரில் மாவட்டத்தில் தொடங்கி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் வரை பாலாறு வறண்டு மணல் மேடுகளாகவே காட்சியளித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகம், ஆந்திர மாநிலங்களில் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஆந்திரம் தடுப்பணைகளையும் கடந்து தமிழகத்திற்குள் பாலாற்றில் தண்ணீர் வந்ததுடன், இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனை விவசாயிகளும், பொதுமக்களும் பூஜைகள் செய்து வரவேற்றனர்.

அதன்பின்னர், 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பாலாற்றின் துணை நதிகளால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்த தண்ணீர் பாலாற்றில் இணைந்து தற்போது கரைபுரண்டு சென்று கொண்டுள்ளது. வினாடிக்கு 47 ஆயிரம் கன அடி வீதம் இரு கரைகளையும் தொட்டபடி பாலாற்றில் தண்ணீர் செல்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து பாலாற்றில் வெள்ளம் வந்து கொண்டுள்ளதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Palar River flood People happy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT