நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ.30,000 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2020 அன்று இரவு காரைக்கால் – மகாபலிபுரம் அருகில் ‘நிவர்’ புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தியது.
இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. புயல் கரையைக் கடந்தபோது அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர்
செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘நிவர்’ புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், சமையல் எண்ணெயும் வழங்க உத்தரவிட்டேன்.
புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.
இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு
25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.