தமிழ்நாடு

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றுக: கே.பாலகிருஷ்ணன்

27th Nov 2020 04:31 PM

ADVERTISEMENT

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 26.11.2020 அன்று புதுச்சேரிக்கு 30 கி.மீ. வடக்கில் நிவர் புயல் கரையைக் கடந்தது. புயலுக்கு முன்பும், பின்பும் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பெய்த பெருமழையாலும், புயலாலும் பல மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக புயல் வலுவிழந்து அச்சப்பட்ட அளவிற்கு பாதிப்புகள் ஏற்படவில்லை.

புயல் கடந்த மரக்காணம் பகுதி அல்லாமல் புதுச்சேரி, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பல பகுதிகளில் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் பாழாகியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் வாழை, செங்கரும்பு உள்ளிட்டு பல பயிர்கள் வெள்ளத்தால் நாசமடைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நெற்பயிர் வெள்ளத்தால் மூழ்கி அழுகிவிட்டன. வெள்ளாற்றில் நீர்பெருக்கெடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கடலோர பகுதிகளில் மீனவர்களின் வாழ்வாதாரம் இக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள், மின்கம்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

ADVERTISEMENT

2015ம் ஆண்டின் கனமழை, பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு அளவிற்கு நிவர் புயலால் பாதிப்பு இல்லையென்றாலும், சென்னையில் தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், திருவான்மியூர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்டு சென்னை மாநகரத்தில் பல பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் சூழ்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பல ஆயிரம் பெருமானமுள்ள மின் சாதனங்கள் நாசமாகியுள்ளன. நிவர் புயலால் மட்டுமல்ல தொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னை மாநகரத்திலும் மற்ற பிற பகுதிகளிலும் வெள்ளம் வீடுகளுக்குள் சென்று மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாவது தொடர் கதையாக உள்ளது. அறிவியல் பூர்வமான நகர்புற திட்டமிடாததே இதற்கு முக்கிய காரணம்.

வெள்ளம் வடிவதற்கான கட்டமைப்பும், பாதாள சாக்கடை கட்டமைப்பும் சரியாக இல்லாத காரணத்தினால் வெள்ளக் காலங்களில் இரண்டும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் இது ஏற்பட்டாலும் சரிசெய்வதற்கான முறையில் மாநில அரசு நடவடிக்கை எடுப்பதில்லை.

¨           கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புயலால் சாய்ந்த மற்றும் நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்களுக்கு மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தி, பாதிப்புகளுக்கேற்ற அளவு  உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும்.

¨           வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்த பகுதிகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநில அரசாங்கம் வீடுகள் கட்டிக் கொள்ளும் அளவிற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.

¨           சாய்ந்த மின்கம்பங்களை நிறுவுவதோடு, சாலைகள் பராமரிப்பையும் விரைந்து மாநில அரசு செய்திட வேண்டும்.

¨           இக்காலத்தில் மீன்பிடிக்கச் செல்ல இயலாத மீனவர் குடும்பங்களுக்கும், வேலையிழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் மாநில அரசாங்கம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.

¨           வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து ஏற்பட்ட சேதாரங்களையும் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

நிவர் புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு மத்திய அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். மாநில அரசும் வலியுறுத்திட வேண்டும். மாநில அரசு தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து நிவாரணப் பணிகளை விரைந்து செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Tags : chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT