தமிழ்நாடு

பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறப்பு

27th Nov 2020 09:07 PM

ADVERTISEMENT

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 33 அடியை எட்டியதால் 4 ஷட்டர்கள் மூலம் வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்தது. அதன்படி பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வரும் நீர், அம்மம்பள்ளி அணையிலிருந்து வரும் நீர் மற்றும் மழை நீர்  என வரத்து அதிகரித்து 2,536 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது.

அதேபோல் புழல் ஏரியில் மழைநீர் மற்றும் வரத்து கால்வாய்கள் மூலம் பெறப்பட்டு நீர் வரத்து அதிகரித்து 2,790 மில்லியன் கனஅடியாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மொத்தமுள்ள 35 அடியில் 33 அடி இருப்பு உயர்ந்ததால் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. பொதுப்பணி துறை அதிகாரிகள் 4 ஷட்டர்களை திறந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றினர். 

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் குறித்து 

ADVERTISEMENT

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். கடந்த 1940 முதல் 1944 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கம் ஆனது 8,458 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. 35 அடி உயரமும் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் தற்போதைய நிலவரப்படி 2,536 மில்லியன் கனஅடி கொள்ளளவு 34 அடியை நெருங்கி உள்ளது.

கடந்த 2015 இல் இதே போன்று புயல் காரணமாக ஏரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் நீர், அதேபோல் ஆந்திர மாநிலம் அம்மம் பள்ளி அணையில் இருந்து வரும் நீர், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஏரி பகுதியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் நந்தி ஆற்றில் கலந்து பூண்டி ஏரியில் கலக்கும் நீர் மற்றும் மழை நீர் என பூண்டி ஏரிக்கு தற்போதைக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர்வந்து கொண்டிருப்பதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்தது.

இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 4 முறை மட்டுமே உபரிநீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 இல் ஒரு லட்சம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீரானது ஒதப்பை எறையூர் தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றில் கலந்து காரனோடை ஜன ப்பசத்திரம். எடையார் சாவடி வழியாக எண்ணூர் கடலில் கலக்கும்.

திறக்கப்பட்ட நீரானது திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்ட வட்டங்கள் வழியாக செல்லும் .எனவே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்றும்‌ கால்நடைகளை ஆற்றோரம் விட வேண்டாம்" என மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT