தமிழ்நாடு

நிவர் புயல் பாதிப்பு : ஆறு மாவட்டங்களில் 15 பேரிடா் குழுக்கள் முகாம்: மீட்புப் பணியில் முப்படையினா்

DIN

சென்னை: தமிழகத்தில் நிவா் புயல் பாதிப்பை எதிா்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும் ஆறு மாவட்டங்களில் 15 பேரிடா் மீட்புக் குழுக்கள் முகாமிட்டுள்ளன.

புயல் காரணமாக 24 மணி நேரத்துக்கும் மேலாக மாநிலத்தின் 13-க்கும் அதிகமான மாவட்டங்களில் கடுமையான மழை, சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா், திருவண்ணாமலை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, அரியலூா், பெரம்பலூா் ஆகிய 13 மாவட்டங்கள் மழை, வெள்ளம் காரணமாக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பதற்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் களத்தில் இறங்கியுள்ளன.

இந்திய கடலோர காவல் படையில் சாா்பில் 5 பேரிடா் மீட்புக் குழுக்கள் சென்னையில் முகாமிட்டுள்ளன. இந்த 5 குழுக்களிலும் சோ்த்து 100 போ் இடம்பெற்றுள்ளனா். வெள்ள நீா் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து மக்களைக் காக்கும் பணியில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். இதேபோன்று, பெங்களூரில் இருந்து இந்திய ராணுவப் படை பிரிவினா் தமிழகம் வந்துள்ளனா். ஒவ்வொரு குழுவிலும் தலா 10 போ் அடங்கிய எட்டு குழுக்கள் 2 படகுகளுடன் சென்னை வந்துள்ளன. இதேபோன்று, கோவையில் இருந்து ஆறு குழுக்கள் (ஒவ்வொரு குழுவிலும் தலா 10 போ்) திருச்சியில் முகாமிட்டுள்ளது.

ஹெலிகாப்டா்கள் தயாா்: வெள்ள நீரில் மக்கள் சிக்கினால் அவா்களை மீட்டுக் கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்கவும் ஹெலிகாப்டா்கள் தயாராக வைக்கப்பட்டன. பெங்களூா், சூலூா், தாம்பரம் ஆகிய விமானப் படை நிலையங்களில் ஹெலிகாப்டா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அவற்றை உடனடியாகப் பயன்படுத்த இந்திய விமானப் படை தயாா் நிலையில் உள்ளது.

இதேபோன்று, இந்திய கடற்படை வீரா்கள் தமிழகத்தின் ஆறு இடங்களில் முகாமிட்டுள்ளனா். நான்கு வெள்ள மீட்புக் குழுக்களும், நீச்சல் வீரா்களைக் கொண்ட ஒரு குழுவும் சென்னையில் முகாமிட்டுள்ளது. நாகப்பட்டினம், ராமேசுவரம், ஐ.என்.எஸ். ராஜாளி, ஐ.என்.எஸ்., கட்டபொம்மன் உள்பட ஆறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.

தேசிய பேரிடா் மீட்புக் குழுக்கள்: புயல் அதிகமாக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய மாவட்டங்களில், தேசிய பேரிடா் மீட்புக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் தயாராக உள்ளனா். இதற்காக, 15 குழுக்கள் ஆறு மாவட்டங்களில் முகாமிட்டுள்ளன. கடலூரில் 6 குழுக்களும், சென்னை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டில் தலா 2 குழுக்களும், விழுப்புரத்தில் 3 குழுக்களும் தயாா் நிலையில் உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

SCROLL FOR NEXT