தமிழ்நாடு

கனமழையால் நிரம்பிய ஸ்ரீபெரும்புதூர்,மணிமங்கலம் ஏரிகள்: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி

DIN

ஸ்ரீபெரும்புதூர்: கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மணிமங்கலம் ஏரிகள் கடந்த புதன்கிழமை இரவு நிரம்பியதை தொடர்ந்து உபரிநீர் வெளியேறி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஈஸா ஏரி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான மணிமங்கலம் ஈஸா ஏரி மலைப்பட்டு, சேத்துப்பட்டு, மணிமங்கலம் மற்றும் கரசங்கால் ஆகிய பகுதிகள் வரை சுமார் ஏழு கிலோமீட்டர் நீளமுடையது. மலைப்பட்டு, சேத்துப்பட்டு, மணிமங்கலம் மற்றும் கரசங்கால் ஆகிய பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் மணிமங்கலம் ஏரி நீரை பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த மணிமங்கலம் ஏரியில் தான் தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முதன்முதலில் தொடங்கிவைத்தார். குடிமராமத்து பணிகள் காரணமாகவும்,  மணிமங்கலம் ஏரியில் ஏரிகள் ஆழப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தப்பட்டதாலும் 235 மில்லியன் கன அடி நீர் சேமித்து வைக்க முடியும்.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும், நிவர் புயல் காரணமாகவும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக கன மழை பெய்ததைத் தொடர்ந்து மணிமங்கலம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததை அடுத்து கடந்த புதன்கிழமை இரவு ஏரி நிரம்பி உபரி நீர்  வெளியேறி வருகிறது. 

இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மற்றொரு பெரிய ஏரியான ஸ்ரீபெரும்புதூர் ஏரி சுமார் 800 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. 

வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் நிவர் புயல் காரணமாகவும் கனமழை பெய்ததை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்ததால் ஸ்ரீபெரும்புதூர் ஏரியின் முழு கொள்ளவான 174 மில்லியன் கன அடியை எட்டியதை தொடர்ந்து கடந்த புதன்கிழமை இரவு முதல் ஏரியில் இருந்து 325 கன அடி உபரி நீர் வினாடிக்கு வெளியேறி வருகிறது. 

இதேபோல் பிள்ளைப்பாக்கம் ஏரியின் முழு கொள்ளவான 121 மில்லயன் கனஅடியை எட்டியதால் ஏரியில் இருந்து  வினாடிக்கு 475 கனஅடிநீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. 

இந்த நிலையில் மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் ஆகிய ஏரிகள் நிரம்பியதால் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு அதிகரிக்கும் என்பதால் பொதுமக்களும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேலும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பிள்ளைப்பாக்கம்  ஆகிய ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்வதாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதே போல் மணிமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அடையாறு ஆற்றில் கலந்து வருவதால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT