தமிழ்நாடு

தொடரும் கனமழை: பூண்டி ஏரியில் உயரும் நீர்மட்டம்

25th Nov 2020 04:33 PM

ADVERTISEMENT

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதையடுத்து ஏரிகளின் நீர்வரத்தை கண்காணித்து  வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளாகும். இந்த நிலையில் நிவர் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையாலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், அம்மம்பள்ளி அணையிலிருந்தும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கெனவே பூண்டி ஏரிக்கான வரத்துக் கால்வாய் மூலம் மழைநீரும், கிருஷ்ணா கால்வாயில் நீர் வந்து கொண்டுள்ளதால் ஏரியில் நீர் இருப்பு அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஏரி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும்.

பூண்டி ஏரியில் புதன்கிழமை காலை நிலவரப்படி 1,842 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு, பிற்பகலில் 1,872 கன அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் பிற்பகலில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த தொடர்மழையால் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒவ்வொரு முறையில் நீரின் அளவை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில், பூண்டி ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள் மற்றும் மூங்கில் கம்புகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போதைய நிலையில் பூண்டி ஏரியில் நீர் இருப்பு புதன்கிழமை காலையில் இருந்த 30.43 அடியிலிருந்து பிற்பகலில் 30.56 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் 32 அடியை எட்டும்போது, தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்கு எச்சரிக்கையும் செய்யவும் அரசு வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் ஆந்திரத்திலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை நீர் வரத்து 800 கன அடியாக வந்து கொண்டுள்ளது. அதேபோல், தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு மட்டும் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

மழையளவு விவரம்: திருவள்ளூர் பகுதியில் புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு: (மி.மீட்டரில்)

செங்குன்றம்:100, பூந்தமல்லி:97, சோழவரம்:87, ஜமீன் கொரட்டூர்:58, பொன்னேரி:44, கும்மிடிபூண்டி:41, தாமரைப்பாக்கம்:37, திருவள்ளூர்:36, பூண்டி:26.80, திருவாலங்காடு:20, ஊத்துக்கோட்டை:8, திருத்தணி:1 என மொத்தம் 555.80 மி.மீட்டர் என 39.70 மி.மீ சராசரி மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT