தமிழ்நாடு

இளைஞர் நீதிக் குழுமங்களுக்கு காணொலி வசதி: முதல்வர் தொடக்கி வைத்தார்

25th Nov 2020 12:12 PM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 24.11.2020 அன்று தலைமைச் செயலகத்தில், சமூக பாதுகாப்புத் துறை சார்பில், 6 அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் ஒரு அரசினர் பாதுகாப்பு இடத்தில் தங்கியுள்ள சிறார்களின் வழக்கு விசாரணைகளை 16 இளைஞர் நீதிக் குழுமங்கள் காணொலிக் காட்சி மூலமாக மேற்கொள்ள ஏதுவாக, 23 இடங்களில் 2 கோடியே 60 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் கடந்த 11.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “தற்போது, அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களை ஒவ்வொரு விசாரணை நாளிலும் சம்மந்தப்பட்ட மாவட்ட இளைஞர் நீதிக் குழுமங்களுக்கு அழைத்துச் சென்று வர வேண்டியுள்ளது. ஏற்கனவே, 8 மாவட்டங்களில் இளைஞர் நீதிக் குழுமங்கள் கூர்நோக்கு இல்லங்களுடன் இணைக்கப்பட்டு, கூர்நோக்கு இல்ல சிறார்களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது எஞ்சியுள்ள தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கடலூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலுள்ள 6 அரசினர் கூர்நோக்கு இல்லங்களை, அவற்றுடன் தொடர்புடைய 16 மாவட்டங்களிலுள்ள இளைஞர் நீதிக் குழுமங்களுடனும் காணொலிக் காட்சி மூலம் இணைக்கும் பணிகள் எல்காட் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

இதையும் படிக்கலாமே.. சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை: முதல்வர் பழனிசாமி

ADVERTISEMENT

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களின் வழக்கு விசாரணைகளை திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நிலகீரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள 16 இளைஞர் நீதிக் குழுமங்கள் காணொலிக் காட்சி மூலமாக மேற்கொள்ள ஏதுவாக, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கடலூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களிலுள்ள 6 அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் வேலூரில் உள்ள ஒரு அரசினர் பாதுகாப்பு இடம், என மொத்தம் 23 இடங்களில் 2 கோடியே 60 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் எல்காட் நிறுவனத்தின் மூலமாக அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

இதன்மூலம், அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் அரசினர் பாதுகாப்பு இடம் ஆகிய இடங்களில் தங்கியுள்ள சிறார்களை ஒவ்வொரு விசாரணை நாளிலும் சம்பந்தப்பட்ட மாவட்ட இளைஞர் நீதிக் குழுமங்களுக்கு நேரில் அழைத்துச் செல்லும் காலவிரயத்தை தவிர்க்கவும், வழக்குகளை விரைந்து தீர்வு செய்திடவும், பயணத்தின் போது ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளை தவிர்த்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT