தமிழ்நாடு

புதுச்சேரியில் இன்று கரையைக் கடக்கிறது புயல்? 145 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று

தினமணி

வங்கக் கடலில் உருவாகியுள்ள "நிவர்' புயல் புதுச்சேரியில் புதன்கிழமை (நவ.25) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் 145 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை புயலாக உருவெடுத்து, இரவில் தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இது அதி தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதி, குறிப்பாக புதுச்சேரி அருகில் புதன்கிழமை மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
 இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியது: "நிவர்' புயல் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் வரும் வெள்ளிக்கிழமை (நவ.27) வரை மழை தொடரும். புதன்கிழமை கடலோரப் பகுதிகளில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.
 திருவண்ணாமலை, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை அதி பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல்  மிக பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 நாளை மழை பெய்யக்கூடிய இடங்கள்: செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் வியாழக்கிழமை (நவ.26) பெய்யக் கூடும்.
 காற்றின் வேகம் 145 கி.மீ.: நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.25) மணிக்கு 120 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்திலும் சில வேளைகளில் 145 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 80 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
 கடல் சீற்றம்: தமிழக கடற்கரை பகுதிகள் புதன்கிழமை இரவு வரை சீற்றத்துடன் காணப்படும். கடல் அலைகள் இயல்பைவிட 2 மீட்டர் வரை உயர எழும்பக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை, புறநகர்ப் பகுதிகளில்  மழை தொடரும். ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும் என்றார் பாலச்சந்திரன்.
 தமிழகம்-புதுச்சேரியில் இன்று அரசு பொது விடுமுறை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்-புதுச்சேரி முழுவதும் புதன்கிழமை (நவ.25) பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு-தனியார் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் மீட்புப் பணிக்காக 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்; சுமார் 460-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் புயல் நிவாண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 யாருக்கு விடுமுறை? உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வரக் கூடிய அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் வரக்கூடிய அலுவலகங்கள், வாரியங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை புதன்கிழமையன்று மூடப்பட்டிருக்கும் என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 ஆன்-லைன் வகுப்புகள்: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்- லைன் வகுப்புகளுக்கும் புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
 கடற்கரைக்கு செல்லத் தடை:புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. கடற்கரைச் சாலையில் மக்கள் செல்ல செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது.
 அரசுத் துறையினருக்கு விடுமுறை ரத்து: இதனிடையே, முதல்வர் வே. நாராயணசாமி புதுச்சேரி கடற்கரையை செவ்வாய்க்கிழமை காலை பார்வையிட்டார். அனைத்துத் துறை அதிகாரிகளும் விடுமுறை எடுக்கக் கூடாது எனவும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை மின் மோட்டார் மூலம் அகற்றவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், உணவு, குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் வே. நாராயணசாமி கூறினார்.
 144 தடை உத்தரவு: இதனிடையே, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் (பொ) பூர்வா கார்க், புயலால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை (நவ. 26) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பேரிடர் பணி-சுகாதார சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 பேரிடர் மீட்புக் குழு வருகை: இதனிடையே, அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 36 பேர் மரம் வெட்டும் இயந்திரங்கள், ரப்பர் படகுகள், கட்டட இடிபாடுகளை அகற்றும் இயந்திரங்கள், இரும்பு அறுக்கும் கருவிகள், மனிதர்களைக் காப்பாற்றும் மிதவைகள் உள்ளிட்ட பொருள்களுடன் புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
 முழு ஒத்துழைப்பு: தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் பிரதமர் உறுதி
 சென்னை/புதுச்சேரி, நவ. 24: நிவர் புயலால் மழை-வெள்ளத்தைச் சந்தித்து வரும் தமிழகம், புதுச்சேரிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
 இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-புயல் பாதிப்பு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நிவர் புயல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேட்டறிந்ததோடு, தேவைப்படும் உதவியும், ஒத்துழைப்பும் மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் என்று முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
 புதுச்சேரி முதல்வருடன் காணொலி மூலமாக பிரதமர் ஆலோசனை நடத்தினார். புதுவைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக உள்ளது என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT