தமிழ்நாடு

சீர்காழி முகாம்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கல்

25th Nov 2020 06:04 PM

ADVERTISEMENT

சீர்காழி: நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சீர்காழி வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்கள் மற்றும் முகாம்களில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதனையடுத்து நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சீர்காழி பகுதியில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே இன்று பிற்பகலுக்குப் பிறகு சீர்காழி குறிப்பாக கடலோர கிராமங்களில் கனமழை காற்றுடன் பெய்யத் துவங்கியது. திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் கடல் அதிக சீற்றத்துடன், கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த புயல் மழையில் இல்லாத அளவிற்கு திருமுல்லைவாசல் கடலில் அதிக உயரத்துடன் அலைகள் இருந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் தொடுவாய் கூழை யார், புதுப்பட்டினம் பழையார் ஆகிய கடற்கரை கிராமங்களிலும் கடல் கொந்தளிப்புடன் சீற்றத்துடன் காணப்படுகிறது.

ADVERTISEMENT

மீனவர்கள் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் தங்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை பத்திரமாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். சீர்காழி வட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அளக்குடி முதலை மேடு திட்டு, புதுப்பட்டினம் தாண்டவன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டு கைகள் சுத்தப்படுத்திக் கொண்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

முகாம்களில் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக தங்கியிருப்பதை மருத்துவக்குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. மேலும் அவசரத் தேவைக்கு மருந்து மாத்திரைகளையும் முகாம்களில் வழங்குகின்றனர்.

இதனை வட்டாட்சியர் ஹரிதரன் பார்வையிட்டார். இதேபோல் மீனவ கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உணவுகள் முறையாக சரியான நேரத்திற்கு வழங்கப்படுகிறதா என்று சீர்காழி எம்எல்ஏ பிவி.பாரதி ஒவ்வொரு முகாமுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சீர்காழியில் பிற்பகலுக்குப் பிறகு பெய்யத் தொடங்கிய கனமழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் ஏதும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT