தமிழ்நாடு

சத்தியமங்கலம்: மல்லிகைப்பூ கிலோ ரு. 2,000-க்கு விற்பனை

25th Nov 2020 05:06 PM

ADVERTISEMENT

பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ விளைச்சல் குறைந்ததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லி கிலோ ரூ.2,000-க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், இக்கரை தத்தப்பள்ளி, பகுத்தம்பாளையம், கொத்தமங்கலம், பவானிசாகர், ஆலாம்பாளையம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும், திருவனந்தபுரம், எர்ணாகுளம், மைசூரு, பெங்களுரு, ஐதராபாத் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைச் செடியில் உள்ள அரும்புகளில் பூ மொட்டுகள் கருகி விடுவதால் மல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு வழக்கமாக 6 டன் வரத்து இருந்த நிலையில் தற்போது வரத்து 1 டன்னாக குறைந்தது. வரத்து குறைவு காரணமாக மல்லி விலை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லி கிலோ ரூ.2,000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லை கிலோ ரூ.950-க்கும், காக்கடா ரூ.850 க்கும் விற்பனையானது. சம்பங்கி கிலோ ரூ.150க்கும் செண்டுமல்லி ரூ.120க்கும் விற்கப்பட்டது. பனிக்காலம் முடியும் வரை மல்லிப் பூ விளைச்சல் குறைவாக இருக்கும் என்பதால் தை மாதம் முடிந்து மாசி மாதத்தில் பூக்கள் வரத்து அதிகரிக்கும் என மல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT