தமிழ்நாடு

சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை: முதல்வர் பழனிசாமி

25th Nov 2020 01:34 PM

ADVERTISEMENT

 

சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் கனமழை பெய்து வருவதால், முழுக் கொள்ளவை எட்டவிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து  பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிலைமைகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

இதையும் படிக்கலாம்.. பல கிலோ மீட்டர் தொலைவில் தீவிர நிவர் புயல்; வெள்ளக்காடாக சென்னை

ADVERTISEMENT

அப்போது பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை கொட்டும் மழையில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிவர் புயல் உருவாகியிருக்கிறது. சென்னையிலிருந்து 300 கிலோமீட்டர், கடலூர் மாவட்டத்திலிருந்து 240 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருக்கிறது. இப்புயல் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு நள்ளிரவு 1 மணியளவில் புதுச்சேரி அருகில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. 

தமிழ்நாடு அரசால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்களை அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாம்களில் தங்க வைத்துக்கொண்டிருக்கிறோம். சென்னை மாநகரத்தில் 200 வார்டுகள் இருக்கின்றன. அந்த 200 வார்டுகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 400 நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டத்தின் உயரம் 24 அடி. தற்போது 21.5 அடி உயரம் நீர் நிரம்பியிருக்கின்றது. ஏரிக்கு 4000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கின்றது. அணையிலிருந்து இன்று 12 மணியளவில் 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கின்றது. ஏரிக்கு வருகின்ற நீரை படிப்படியாக திறப்பதற்கு பொதுப்பணித் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு, ஆதனூர் ஏரியிலிருந்து 2000 கனஅடி நீர் அடையாற்றின் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கின்றது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்னும் இரண்டு, மூன்று மணி நேரத்திற்குள் அங்கு வருகின்ற நீர் முழுவதும் திறக்கப்படும். சுமார் 6,000 கனஅடி நீர் அடையாற்றின் வழியாக செல்கிறது. அடையாற்றில் சுமார் 60,000 கனஅடி தண்ணீர் செல்லக்கூடிய அளவிற்கு ஆற்றின் அகலம் இருக்கின்றது. அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அரசால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை, நேற்றையிலிருந்து கனமழை பொழிந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகரத்தில் சுமார் 30 தாழ்வான பகுதிகளில் தண்ணீர்  தேங்கியிருக்கின்றது. அந்த தண்ணீரை அகற்றுவதற்காக, சென்னை மாநகராட்சி, ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி, அந்தத் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல டெல்டா மாவட்டங்கள், அதோடு, புயலால் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 13 மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது, கனமழை பொழியுமென்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அரசு தக்க அறிவுரைகளை வழங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களும் முகாமிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடலூர் மாவட்ட மீனவ மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அவர்களுடைய படகுகளையெல்லாம் பத்திரப்படுத்தியுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் விரைவில் கரைக்குத் திரும்ப வேண்டுமென்று மீன்வளத் துறையின் மூலமாக செய்திகள் வழங்கப்பட்டு, அதன் வாயிலாக மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர். இந்த நிவர் புயலால் மக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 

கேள்வி: இன்று அரசு விடுமுறை அறிவித்துவிட்டீர்கள். தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருகிறது...
பதில்: நான் முன்னர் குறிப்பிட்ட திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 16 மாவட்டங்களுக்கும் நாளை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

கேள்வி: நிவாரணப் பணிகள் மேற்கொண்டு வருகிறீர்கள். நிவாரணத் தொகை ஏதும் வழங்கப்படுமா?
பதில்: ஏற்கனவே நிவாரணங்கள் வழங்கப்படுவதன் அடிப்படையில் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். 

கேள்வி: நீர்த் தேக்கத்தில் நீர் 35 அடியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறதே?
பதில்: மொத்த அடியே 35 தான். அதில், இன்னும் 5 அடி நீர் தேக்க முடியும். மேலும், குறைவான அளவில் தான் நீர் வந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: நிறைய விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். கஷ்ட காலங்களில் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது...

பதில்: அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துக் கொள்ள வேண்டுமென்று ஏற்கனவே வேளாண் துறை செயலாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவ்வளவு மழையிலும் இங்கே வருகை புரிந்து, நான் அறிவித்த செய்தியை பொதுமக்களுக்கு அளிக்கவிருக்கின்ற ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று நள்ளிரவில் புயல் கரையைக் கடக்கவிருப்பதால், நாளை தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT