தமிழ்நாடு

இரவு 8 மணி முதல் கனமழை; கரையை கடந்தும் 6 மணி நேரம் புயலாகவே நீடிக்கும்: வானிலை மையம்

25th Nov 2020 04:32 PM

ADVERTISEMENT


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் தீவிர நிவர் புயலானது புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த எஸ். பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் தீவிர நிவர் புயலின் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி முதல் கனமழை பெய்யத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என்றும், தீவிர நிவர் புயல் கடலூரிலிருந்து 110 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 215 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

நிவர் புயல் கரையை கடந்து 6 மணி நேரத்துக்குப் பிறகே வலுவிழக்கும் என்றும், அதுவரை புயலாகவே நீடிக்கும் என்றும், நிவர் புயல் கரையைக் கடந்து தரைப் பகுதியைக் கடந்து செல்லும் பாதையில் பலத்த காற்றும், கனமழையும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

புயல் கரையைக் கடந்து செல்லும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, திருப்பத்தூரில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

தற்போதைய நிலவரப்படி, நிவர் புயலானது  புதுச்சேரிக்கு அருகே அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரையை கடந்த பிறகும் புயல் 6 மணி நேரம் நீடிக்கும், அதன்பிறகே வலுவிழக்கும். அதே வேளையில், நிவர் புயலானது முழுமையாகக் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆகும் என்றும் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT