சென்னை: தொடர்மழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பினையடுத்து சென்னையில் 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிகாலை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.
அதேநேரம் அதி தீவிர புயலாக மாறிய நிவர் தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று சற்றுமுன்னர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்மழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பினையடுத்து சென்னையில் 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத்தரப்புவெளியிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.