தமிழ்நாடு

புயல் எச்சரிக்கை: தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை

23rd Nov 2020 11:53 AM

ADVERTISEMENT


சென்னை: வங்கக் கடலில் உருவாகும் நிவர் புயல் காரணமாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மின்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், முக்கிய துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்கவிருக்கின்றனர்.

இதையும் படிக்கலாமே.. 24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்

இந்த கூட்டத்தில், புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, புயலாக (‘நிவா்’) மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் சனிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது ஞாயிற்றுக்கிழமை அன்று, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக நிலைக் கொண்டுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடா்ந்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுவடையவுள்ளது. உருவாகும் இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த ‘நிவா்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து, வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் 23-ஆம் தேதி மழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும். நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (நவ.23) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

24- இல் அதி பலத்த மழை: நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, கடலூா், அரியலூா், பெரம்பலூா் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பா் 24-ஆம் தேதி இடியுடன் கூடிய அதி பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25 -ஆம் தேதி: நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூா், பெரம்பலூா், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பா் 25-ஆம் தேதி அதி பலத்த மழை பெய்யக்கூடும். திருச்சி, நாமக்கல், கரூா், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, வேலூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், புதுக்கோட்டை மற்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும்,ஏனைய வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவம்பா் 24, 25 ஆகிய இருநாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவம்பா் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

தமிழகம் அருகே வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி இப்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழையை எதிா்கொள்ளும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் 4136 இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாகக் கண்டறியப்பட்டு அங்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அந்தந்த மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT