தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படைகள் விரைவு: அமைச்சர் உதயகுமார்

23rd Nov 2020 09:28 AM

ADVERTISEMENT

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து 6 தேசிய பேரிடர் மீட்புப் படைகள் கடலோர மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா். 

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் சனிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. நேற்று இது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக மாறிய நிலையில் தற்போது அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னையிலிருந்து 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு அருகே 600 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுவடையும் என்றும் வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த ‘நிவா்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து, வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன்காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவம்பா் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நிவர் புயல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், அரக்கோணத்தில் இருந்து 6 தேசிய பேரிடர் மீட்புப் படைகள் கடலோர மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 36 வருவாய் மாவட்டகங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT