தமிழ்நாடு

ஏழை மாணவியின் மருத்துவப்படிப்பு செலவை ஏற்ற ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர், ஊராட்சி மன்றத் தலைவி

22nd Nov 2020 05:21 PM

ADVERTISEMENT

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூர் கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அரசு உள் இட ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.

அதனையடுத்து ஊராட்சியிலிருந்து முதல்முறையாக மருத்துவம் படிக்க செல்லும் ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவிக்கு சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவரும், காவேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியும் ஐந்தாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொண்டு முதலாமாண்டுக்கான கல்விக் கட்டணத்தை மாணவியிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர். 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி தாண்டவராயன், பூங்கோதை   தம்பதியின் மகள் சிவாம்பிகா. இவர் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசிராமணி செட்டிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். பின்னர் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11,12 ஆம் வகுப்பு படித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் 316 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தற்போது அரசு வழங்கிய 7.5 உள் இட ஒதுக்கீட்டில் மாணவிக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் காவேரிப்பட்டி ஊராட்சியில் இருந்து முதன்முறையாக மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ள ஏழை விவசாயின் நிலையை உணர்ந்த சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், காவேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லிராணி ஆகியோர் மாணவியின் ஐந்தாண்டு மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து முதலாமாண்டு கல்விக் கட்டணத்தை அம்மாணவியிடம் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவரும் வழங்கினர். காவேரிபட்டி ஊராட்சி மன்றத் தலைவி சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுவின் துணைத்தலைவரின் சகோதரி ஆவார். இருவரின் சேவையை கிராம மக்கள் பாராட்டினர். 

இது குறித்து மாணவி சிவாம்பிகா கூறியது,

அரசுப்பள்ளியில் படித்த நான் உள்பட  அனைத்து ஏழை மாணவர்களும் மருத்தும் பயில 7.5 சதவீதம் அரசு உள் இட ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் மேலும்  முதன்முறையாக எங்களது கிராமத்தில் இருந்து மருத்துவம் பயில செல்லும் எனக்கு உதவிய ஒன்றியக்குழு துணைத்தலைவருக்கும், ஊராட்சி மன்றத்தலைவிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  நான் மருத்துவராகிய பின்னர் எங்களது கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கும்,  மற்ற கிராமப்புறத்தில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் சேவை ஆற்றுவேன் என்றார்.

 

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT