தமிழ்நாடு

வனவிலங்குகளின் தாகம் தீர்க்க பெலாப்பாடி நீரோடையில் தடுப்பணை

22nd Nov 2020 05:37 PM

ADVERTISEMENT

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி வனச்சரகம் பெலாப்பாடி வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்காக, ரூ.4 லட்சம் செலவில் பெலாப்பாடி நீரோடையின் குறுக்கே வனத்துறை வாயிலாக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுவது குறையுமென வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாழப்பாடி வனச்சரகம் பெலாப்பாடி வனப்பகுதியில், பல்வேறு இன குரங்குகள், மான்கள், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கடமை, காட்டெருமை, காட்டாடு உள்ளிட்ட வனவிலங்களும் நிறைந்துள்ளன. பெரும்பாலும் தாவர உண்ணிகள் என்பதால் தீவனம் மற்றும் தண்ணீருக்கு வனத்தையே சார்ந்துள்ளன.

ADVERTISEMENT

வனப்பகுதியிலுள்ள நீரோடை, சுனை, பாலி உள்ளிட்ட நீர்நிலைகளும் கோடை காலத்தில் வறண்டு போய்விடுவதால், தண்ணீருக்கு வழியின்றி வனவிலங்குகள் பரிதவிக்கின்றன. தண்ணீர்த்தேடி வரும் வனவிலங்குகள், வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து, விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்துவதும், நாய்கள் மற்றும் மனிதர்களின் தாக்குதலில் உயிரிழப்பதும் தொடர்ந்து வந்தது.

எனவே, தண்ணீருக்காக வனவிலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறி, கிராமத்திற்குள் புகுவதைத் தடுக்க பெலாப்பாடி வனப்பகுதியில் தடுப்பணை அமைக்க வாழப்பாடி வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து, பெலாப்பாடி நீரோடையின் குறுக்கே வனவிலங்கு எல்லைப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் செலவில் தடுப்பணை அமைத்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவமழையால் பெலாப்பாடி நீரோடையில் நீர்வரத்து ஏற்பட்டு, வனத்துறை அமைத்த புதிய தடுப்பணை நிரம்பியுள்ளது. இந்த தடுப்பணை வனவிலங்களின் தண்ணீர் தேவையைப்  பூர்த்தி செய்யும் என்பதால், பெலாப்பாடி வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி கிராமத்திற்குள் புகுவது குறையுமென வாழப்பாடி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT