தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய மூன்று இளைஞர்களின் உடல்கள் மீட்பு

20th Nov 2020 11:38 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமான மூன்று இளைஞர்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மலை அடிவார பகுதியில் உள்ள நீர் ஓடைகள் மற்றும் அருவிகளில் ஏராளமானவர்கள் குளிக்க செல்கின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி(22) ,கோபி (22)முத்து ஈஸ்வரன்( 21) ஆகிய 3 இளைஞர்கள் நண்பர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகதோப்பு பேய் மலை ஓடையில் குளிக்கச் சென்றுள்ளனர். 

அப்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இளைஞர்கள் மூவரும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இளைஞர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்களையும் தேடிவந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வெகுநேரம் ஆகியதால் விளக்கு வெளிச்சத்தில் தீயணைப்புத்துறையினர் தேடினர். அப்போது லேசான சாரல் மழையும் ஓடைகளில் அதிகளவு தண்ணீர் வந்ததால் இரவு நேரம் ஆனதாலும் தேடும் பணியை நிறுத்தினர்.

வியாழக்கிழமை இரவு தீயணைப்புத்துறையினர் தேடும்போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோரும் உடனிருந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தீயணைப்புத்துறையினரோடு பொது மக்களும் அவர்களது உறவினர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் பால்பாண்டி(22), முத்து ஈஸ்வரன்( 21), கோபி (22)ஆகிய மூன்று இளைஞர்களின் உடல் மீட்கப்பட்டது. 

ADVERTISEMENT

மீட்கப்பட்ட மூன்று உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியானதால் கோட்டைப்பட்டி பகுதியே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Tags : srivilliputhur two youths bodies recovered
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT