முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரித்து, நீர்மட்டம் ஒரே நாளில் 1.30 அடி உயர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணையில் வடகிழக்கு பருவமழை காரணமாக வியாழக்கிழமை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாகவும், நீர் இருப்பு 3,964 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 4,822 கன அடியாகவும் இருந்தது. நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,355 கன அடியாக இருந்தது. இதன் மூலம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மூன்று மின்னாக்கிகளில் 122 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அணையின் நீர்மட்டம் 127.90 ஆக இருந்தது, நீர் இருப்பு 4, 244 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 4,688 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 1.30 அடி ஒரே நாளில் உயர்ந்த நிலையில், கூடுதலாக வெளியேற்றிய நீரினால் லோயர்கேம்ப்பில் நான்கு மின்னாக்கிகளும் செயல்பட்டு, முதல் அலகில் 42, இரண்டாவது அலகில் 26, மூன்றாவது அலகில் 42, நான்காவது அலகில்26 மெகாவாட் என மொத்தம் 136 மெகாவாட் மின்சார உற்பத்தி அதிகரித்தது.