தமிழ்நாடு

கே.சி.எஸ்.ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

20th Nov 2020 06:50 PM

ADVERTISEMENT

2020-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடையுங்கள். 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

20.11.2020 முதல் 05.04.2020 வரையிலான காலகட்டத்தில் உங்கள் அனைத்துச் செயல்களையும் நேரான முறையில் செய்து முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் உங்கள் பெயர், புகழ் வளரும். செய்தொழிலில் வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். செல்வம், செல்வாக்கு இரண்டும் சிறப்பாகும். அரசு வழியில் எதிர்பாராத சலுகை கிடைக்கும்.  தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வருவீர்கள். நெடுநாளாக புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.  

06.04.2021 முதல் 13.09.2021 வரையிலான காலகட்டத்தில் பயணங்களின் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். போட்டிகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளை நேர்த்தியாகச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். வேலையில் சுமைகள் அதிகரித்தாலும், சுறுசுறுப்பாகச் செயல்பட்டு சுலபமாக முடித்து விடுவீர்கள். உடன்பிறந்தோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். 

ADVERTISEMENT

14.09.2021 முதல் 20.11.2021 வரையிலான காலகட்டத்தில் வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். சிலருக்கு குடும்பத்துடன் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குடும்பத்தினரும் நண்பர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். புதிய முயற்சிகளை செய்ய விழைவீர்கள். தெய்வ வழிபாடுகளிலும் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பாகப் பிரிவினை சமுகமாக நடந்தேறும். அசையாச் சொத்துகளிலிருந்து வருவாய் வரத் தொடங்கும். அனைத்து விஷயங்களையும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகளிலும் திடீர் திருப்பங்கள் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் சக ஊழியர்களின் அன்பையும் நன்றாகப் பெறுவீர்கள். தோற்றத்தில் மிடுக்குடன் காணப்படுவீர்கள். சிலர் நெடுநாளாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்குரியவர் என்ற பெயரைச் சம்பாதிப்பீர்கள்.

வியாபாரிகள் நஷ்டங்களிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். வியாபாரத்தை சிரத்தையுடன் செய்து முடிக்கவும். எதிர்வரும் தடைகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். அதே நேரம் அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களின் சுறுசுறுப்பு கூடும். வெளியில் கடன் கொடுக்க வேண்டாம்.

விவசாயிகள் விளைச்சல் அதிகரித்து மகிழ்ச்சியைக் காண்பார்கள். புதிய பயிர்களைப் பயிரிடும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வருமானம் சிறப்பாக கிடைக்கும். இதனால் குடும்ப செலவுகளை ஈடு செய்வீர்கள். மேலும், கால்நடைகளால் சில நன்மைகள் உண்டாகும். புதிய குத்தகைகள் தானாக வந்து சேரும். 

அரசியல்வாதிகள் இந்தக் காலகட்டத்தில் வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நேரிடையாக மனம் விட்டுப் பேசி மனஸ்தாபத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். மற்றபடி காரியங்கள் அனைத்தையும் எளிதில் வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். இதன் மூலம் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும் பணமும் ஒருங்கே வந்து சேரும். கலைஞர்களுடன் நட்புடன் பழகி அவர்களாலேயே புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவமணிகள் பலமுறை படித்து மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சி செய்யவும். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு உங்களுக்கு உந்துசக்தியாக இருக்கும்.

பரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.

******

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

20.11.2020 முதல் 05.04.2021 வரையிலான காலகட்டத்தில் செய்தொழிலில் சக்கை போடு போடுவீர்கள். எடுத்த காரியங்களை தடையின்றி முடித்து அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். சொந்த வீடு, வாகனம், நிலம் வாங்க எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரின் உதவியும் கிடைக்கும்.  சிலர் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்துவார்கள். வருமானம் சிறப்பாகவே இருக்கும். அதே நேரத்தில் உடல்நலத்தை சிறிது கவனிக்க வேண்டிவரும். வயிறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம்.  அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களின் உதவியும், பகைவர்கள் நல்லவர்களாக மாறுவதும் நடக்கும் நேரமிது.

06.04.2021 முதல் 13.09.2021 வரையிலான காலகட்டத்தில் செய்தொழிலில் கவனம் செலுத்தி வருமானம் ஈட்டுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்களை துச்சமென நினைத்தவர்கள் தேடி வந்து நேசக்கரம் நீட்டுவார்கள்.  நெடுநாளாக ஒதுக்கி வைத்திருந்த காரியங்களை தூசுதட்டி விறுவிறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொள்ள ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.
14.09.2021 முதல் 20.11.2021 வரையிலான காலகட்டத்தில் உங்கள் பெயரும் புகழும் செல்வாக்கும் உயர்ந்தே காணப்படும். சமூகத்தில் அரிதான பொறுப்புகளைப் பெறுவீர்கள். வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். பணம் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும். கடன் தொல்லை ஏற்படாது. வழக்கிலும் வெற்றி பெறுவீர்கள். செய்யாத தவறுக்கு தண்டிக்கப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமாகி விடுதலையாவார்கள். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக காரியங்களிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையில் இருந்த சுமைகள் குறையும். சக ஊழியர்கள் உங்களிடம் சகஜமாகப் பழகுவார்கள். உங்களின் தன்னம்பிக்கை பலப்படும். அதே நேரம் அலுவலக ரீதியாக அடிக்கடி பயணம் செய்ய நேரிடும். சம்பள உயர்வு எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே கிடைக்கும்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசியும், கோபம் அடையாமலும் விற்பனை செய்தால் நல்ல லாபம் அடையலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். கூட்டாளிகள் உங்களிடம் அனுசரித்து  நடந்து கொள்வார்கள்.

விவசாயிகளுக்கு இந்தக் காலகட்டத்தில் மகசூல் அதிகமாக இருக்கும். சந்தைகளில் நிலவும் போட்டிகளுக்குத் தக்கவாறு விலை நிர்ணயித்து விற்பனை செய்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். கால்நடைகள் மூலமாகவும் வருமானத்தைப் பெருக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். பால் வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள்.
அரசியல்வாதிகளின் சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்க்கட்சியினர் உங்களைக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் பிடித்த பொறுப்புகளை அடைவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். பிரசாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

கலைத்துறையினர் இதுவரை இருந்து வந்த பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடுவார்கள். புதிய வாய்ப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக உயரும். பணவரவும் அதிகரிக்கும். அதே நேரத்தில், முழு முயற்சி செய்து திறமைகளை வெளிப்படுத்தினால்தான் நல்ல பெயர் பெற்று, நழுவிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்மணிகள் இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பார்கள். உற்றார் உறவினர்களை அரவணைத்து சென்று செல்வாக்கை உயர்த்தி கொள்வீர்கள். கணவர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வீடு வாங்குதல், வீடு மாறுதல் செய்யும் காலகட்டம் இது. 

மாணவமணிகளுக்கு கல்வியில் அதிக நாட்டம் உண்டாகும். பள்ளியில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வெளியூர், வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்க தகுதியான வெளி விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

******

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

20.11.2020 முதல் 05.04.2021 வரையிலான காலகட்டத்தில் திட்டமிட்ட காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் வருமானம் சீராக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். உங்களைத் தவறாக நினைத்திருந்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.    வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் நல்ல பெயரும் புகழும் ஏற்படும். அறிமுகமில்லாதவர்கள் கூட தேடி வந்து உங்களுக்கு புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் காலகட்டமிது. 

06.04.2021 முதல் 13.09.2021 வரை உள்ள காலகட்டத்தில் வழக்குகளில் எதிர்பார்த்த வாய்தா கிடைக்கும். உங்கள் செயல்களை வேகத்துடனும் விவேகத்துடனும் செய்து முடிப்பீர்கள். இதனால் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்; தன்னம்பிக்கையும் கூடும். தேவைக்கேற்ற வருமானம் வந்தாலும் செலவுகளும் சமமாக இருந்து கொண்டே இருக்கும். தொழிலை விரிவுபடுத்த பயணங்களையும் மேற்கொள்வீர்கள். செய்தொழிலில் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து அனுபவஸ்தர்களிடம் விவாதிப்பீர்கள். 

14.09.2021 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை சீராக நடத்த வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் சாதனைகளைப் புரிவீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ் உயரத்தொடங்கும். போட்டி பொறாமைகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். இழுத்துக் கொண்டிருந்த வழக்குகளும் நீதிமன்றங்களுக்கு வெளியே சமாதானமாக முடிவடையும். சிலருக்கு பழைய வீடு விற்பனையாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மனம் வேலையில் ஈடுபடாமல் இருந்த சூழ்நிலை மாறி கருத்தூன்றி செயல்படத் துவங்குவீர்கள். உங்களின் தனிப்பட்ட விஷயங்களை மறந்து விட்டு அலுவலக காரியங்களைச் செய்யுங்கள். மேலதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகாது. பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டாகும்.  

வியாபாரிகளுக்கு நெடுநாளைய முட்டுக்கட்டைகள் விலகி, எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். பண வரவு ஓரளவு சீராகவே இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கடன்கள் வாங்கினாலும் அதை வியாபார முன்னேற்றத்துக்காக சீராக பயன்படுத்துங்கள். வெளியூருக்கு சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். நெடுநாளாக தள்ளி போய்க் கொண்டிருந்த ஒரு முக்கியமான பிரச்னை முடிவுக்கு வரும். 

விவசாயிகளுக்கு மகசூல் லாபம் அதிகரிக்கும். விவசாயத்தை விரிவுபடுத்த சீரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விவசாயப் பணியாளர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். கையிலுள்ள பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஊடு பயிர்களைப் பயிரிட்டு மேலும் லாபமடைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் பெருகும். மக்களுக்கு செய்யும் தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். இதனால் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். நீங்கள் தீட்டும் ரகசியமான திட்டங்கள் வெற்றி பெறும். சமூகத்தில் உயர்ந்தவர்களைச் சந்தித்து வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். 

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும் கெüரவமும் கிடைக்கும். பண வரவுடன் படிப்படியான உயர்வினைக் காண்பீர்கள். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்.  

பெண்மணிகளுக்கு ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். பிள்ளைகளால் உற்சாகம் பிறக்கும். மற்றவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். 

மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும்.

******

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

20.11.2020 முதல் 05.04.2021 வரை உள்ள காலகட்டத்தில் முயற்சிகளில் இருந்த தேக்க நிலை மாறி விறுவிறுப்பாக செயல்கள் நடக்கத் தொடங்கும். அனைத்து கஷ்டங்களும் விலகி விடும். வருமானம் திடீரென்று உயரக் காண்பீர்கள். செய்தொழிலில் கிடைக்காமல் இருந்த பதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டிகளில் சாதுர்யமாக ஈடுபட்டு எதிர்பார்த்த லாபங்களை ஈட்டுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இல்லத்தில் புதிய வாரிசுகள் உருவாகும்.  கடன்களைப் படிப்படியாக திருப்பி அடைத்து முழுமையாக கடன்களில் இருந்து விடுபட்டு விடுவீர்கள். செல்வத்துடன் செல்வாக்கும் உயரும். நேர்மையுடன் கடுமையாக உழைப்பீர்கள். அதேநேரம் கையிருப்புப் பொருள்கள் மீது கவனமாக இருக்கவும்.

06.04.2021 முதல் 13.09.2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் சுய முயற்சிகளால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். உங்களின் செயல்களில் வேகம் கூடும். தைரியமாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களும் உங்கள் தேவைக்கு ஏற்ப உதவிகளைச் செய்வார்கள். பேச்சில் தெளிவு உண்டாகும், சிந்தித்து பேசுவீர்கள். தோற்றப் பொலிவு உண்டாகும். எத்தகைய கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் கடைசி நேரத்தில் இறையருளால் மீண்டு வருவீர்கள். 

14.09.2021 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். இல்லத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்களுக்கு அறிவுரை கூறுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பழைய சொத்துக்களை நல்ல விலைக்கு விற்பீர்கள். செய்தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மேலும் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் இந்த காலகட்டத்தில் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்ற வேண்டும்.சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும். அதேநேரம் உழைப்பிற்கு இரட்டிப்பு வருமானத்தையும் பெறுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களும் பலன் தரும். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சற்று கவனம் தேவை. கூட்டாளிகளைத் தவிர்த்திடுங்கள். தனித்தே புதிய முதலீடுகளைச் செய்யுங்கள். தேவைக்கு அதிகமாக சரக்குகளை வாங்காதீர்கள். சந்தைகளில் போட்டி நிலவரம் சற்று சங்கடமாக இருந்தாலும் விலையை அதற்கேற்றவாறு நிர்ணயித்து வியாபாரத்தை விரிவாக்கலாம். 

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முயற்சி செய்வீர்கள். வானம் பார்த்த பூமியை வைத்திருப்பவர்கள் தேவையான மழை பெய்ததால் உன்னதமான விளைச்சலைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் சமுதாயப் பணி செய்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். இதனால் மனதில் திருப்தி உண்டாகும். கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். புதிய பதவிகளையும் பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் சுறுசுறுப்பாக பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். சக கலைஞர்களுடன் சற்று நிதானத்துடன் பழகவும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். 

மாணவமணிகள் கல்வியில் நல்ல ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும் மற்றபடி வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT