தமிழ்நாடு

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி

20th Nov 2020 05:38 PM

ADVERTISEMENT

 

லடாக்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர், லடாக் பகுதியில், இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப் பிரிவில் பணியாற்றி வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், திட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி என்பவர் கடந்த 18-ம் தேதி எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

மேலும், இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும்,  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு உத்தரவிட்டேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியை அடுத்த திட்டங்குளம் ஊராட்சி தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி (34). கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை பணி நிமித்தமாக லடாக் கிளேசியா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், மகள்கள் கன்யா (7), வைஷ்ணவி (4), ஒன்றரை வயதில் பிரதீப்ராஜ் என்ற மகனும் உள்ளனா். இவா் 2 மாத விடுமுறைக்குப் பின், கடந்த பிப்ரவரியில் மீண்டும் பணிக்குத் திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : tn cm ladakh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT