சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் உள்ள முதல் வகுப்புப் பெட்டிகள் அனைத்தும், நவம்பர் 23-ம் தேதி முதல் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எப்போதும் மகளிர் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தினை வழங்கி வருகிறது.
இதன் தொடர்சியாக சென்னை மெட்ரோரயில் நிறுவனம் நவம்பர் 23ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளும் மகளிர் மட்டுமே பயணிக்கும் சிறப்புப் பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.
இதன் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மகளிர் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்திட முடியும். தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம்.
இதைத் தவிர, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் முழு நேரமும் முழுமையாக கண்காணிப்பது, மகளிருக்கென தனி கழிப்பறைகள், வாடிக்கையாளர் சேவை வசதிகள், மது அருந்தியவர்கள் பயணிக்கத் தடை, புகைப் பிடிப்பதற்கு தடை, மற்றும் பிற இடையூறுகளிலிருந்து பாதுகாப்பது, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை பணியமர்த்தி கண்காணிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.