சென்னை: அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கான மாணவர்கள் காணொலி காட்சி விசாரணையில் நுழைந்ததால் பாதிக்கப்பட்ட விசாரணை சிறிது நேரத்துக்குப் பின்னர் தொடங்கியது.
அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு, வெள்ளிக்கிழமை 26-ஆவது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை காலை காணொலி காட்சி மூலம் விசாரிக்க தொடங்கினர். காணொலி காட்சி விசாரணையில் 350 மாணவர்கள் இணைய வழியில் உள் நுழைந்தனர். இதனால் அவர்களது வீடுகளில் உள்ள தொலைக்காட்சியின் ஒலி, குழந்தைகளின் சப்தம் உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டதனால் வழக்குகள் விசாரணையை நீதிபதிகள் நிறுத்தி விட்டனர்.
வழக்குகள் விசாரணை தடைபட்டதால், தேவையில்லாமல் உள்நுழைந்தவர்களை வெளியேறும்படி, சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் யாரும் வெளியேறவில்லை.
கடந்த விசாரணைகளின் போதும் ஏராளமான மாணவர்கள், விசாரணையில் பங்கேற்று, இடையூறு ஏற்படுத்தினர். அப்போது, மாணவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.