ரஷிய நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ரஷிய நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞரும், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிய ஆப்பிரிக்கவியல் துறையில் பேராசிரியருமான அலெக்சாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி 18.11.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.
அலெக்சாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி தமிழிலுள்ள அகத்துறைப் பாடல்களைப் பற்றி ஆய்வு செய்தவர். இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாட்டு பயணத்தின் போது, தன் மாணாக்கர்களையும் அழைத்து வந்து தமிழ் மொழி, இனம் பற்றி அறிய வைத்த பெருமைக்குரியவர்.
அலெக்சாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி உலகின் பழமையான மொழிகளுள் தமிழ் முதன்மையானது என்பதில் உறுதி கொண்டவர். தமிழ் மொழின் மீது பற்றும், பாசமும் கொண்டு, பல நாடுகளில் நடக்கும் கருத்தரங்குகளில் தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்தவர். தமிழ் மொழியில் நன்கு உரையாற்றும் வல்லமை கொண்டவர்.
அலெக்சாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி மையமாகக் கொண்டே ரஷியாவில் தமிழ் ஆய்வுகள் நடைபெற்று வந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறையை நடத்தி ரஷ்ய நாட்டில் தமிழ் ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டவர்.
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.”
என்ற வள்ளுவரின் கூற்றுப்படி அலெக்சாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி வாழ்ந்தவர்.
அலெக்சாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கியின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை
இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.