தமிழ்நாடு

மருதமலையில் சூரசம்ஹாரம்

20th Nov 2020 06:04 PM

ADVERTISEMENT

 

மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா பக்தர்களின்றி நடைபெற்றது. 

கோவை மாவட்டம் மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் 7வது படை வீடாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கந்தசஷ்டி விழா கடந்த 15ம் தேதி தொடங்கி, தினமும் அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து கோவில் நடை 5.30 மணிக்கும் திறக்கப்பட்டது. பின்னர் பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வகையான வாசனைத் திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

கந்த சஷ்டி விழாவின் 6ம் நாளான இன்று காலை 6.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும், 9 மணிக்கு யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு இடும்பன் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது. மதியம் 3 மணியளவில் சுப்பிரமணியசாமி பச்சை நாயகி அம்மன் சன்னதியில் அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சியுடன், இதையடுத்து வீர நடன காட்சி இடம் பெற்றது. 

பின்னர் சுப்பிரமணியசாமி வேலை பெற்றுக்கொண்டு சூரசம்ஹாரத்திற்கு ஆட்டுக்கிடா வாகனத்திலும் வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளி முதலாவதாகத் தாரக சூரனையும், இரண்டாவதாகப் பானுகோபன் வதம், மூன்றாவதாக சிங்கமுகாசுரன் வதம், நான்காவதாக சூரபத்மன் வதம் ஆகியவை நடைபெற்றது. 

தொடர்ந்து வெற்றி வாகை சூடுதல், சேவல் கொடி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் 4.30 மணியளவில் சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமானின் கோபத்தைத் தணிக்கும் விதமாக மகா அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து மகாதீபாராதனையும் நடைபெற்றது. 

வழக்கமாக சூரசம்ஹார விழா நடைபெறும் நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மருதமலைக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் கலந்து அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT