தமிழ்நாடு

ஏற்காடு மலைப்பகுதியில் குரங்குகளுக்கு உணவளிக்கத் தடை

17th Nov 2020 12:57 PM | வே. சக்தி

ADVERTISEMENT


சேலம்: சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் உள்ள ஏழைகளின் உதகை என அறியப்படும் ஏற்காடு சுற்றுலா தலம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஏற்காடு மலையில் காபி, மிளகு, லவங்கம், கடுக்காய், ஜாதிக்காய் ஆகியவை விளைவிக்கப்படுகிறது. 

ஏற்காடு மலையில் காட்டு மாடுகள், முள்ளம்பன்றி, நரி ஆகிய வன உயிரினங்கள், நூற்றுக்கணக்கான பறவையினங்களின் வாழிடமாக உள்ளன. ஏற்காடு மலை அடிவாரம் முதல் கொண்டை ஊசி வளைவுகளில் குரங்குகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. 

ஏற்காடு மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு வாழைப்பழம், பிஸ்கட் உள்ளிட்ட பலவகை தின்பண்டங்களை அளித்து வருகின்றனர். சிலர் தின்பண்டங்களை சாலையோரங்களில் வீசிச் செல்கின்றனர் இதை சாப்பிட வரும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

வனத்துறை சார்பில் ஏற்காடு செல்லும் பாதையில் சுற்றுலா பயணிகள் சாலையோரம் உள்ள குரங்குகளுக்கு உணவுகள் வழங்கக்கூடாது என்று வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகை.

இது தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், மனிதர்கள் உண்ணும் தின்பண்டங்களை குரங்குகளுக்கு வழங்குவதால் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் உள்ளிட்ட மனிதர்களுக்கு வரும் பல்வேறு வகை நோய்கள் குரங்குகளுக்கும் வருகிறது. குரங்குகள் இயற்கையாக காடுகளில் கிடைக்கும் பழங்கள், காய்களை உட்கொண்டு வாழும். 

ஆனால், தற்போது சுற்றுலா பயணிகள் வழங்கும் உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலை உள்ளது. இந்த நிலை தவிர்க்கப்படவேண்டும். குரங்குகள் இயற்கையாக உணவுகளை தேடி சென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் குரங்குகளின் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றனர்.

இதனிடையே வனப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவு உள்ளிட்ட தின்பண்டங்களை வழங்க கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.
 

Tags : Forest Department tamilnadu salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT