தமிழ்நாடு

க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்

17th Nov 2020 08:29 AM

ADVERTISEMENT


முன்னணித் தமிழ்ப் பதிப்பாளரும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா ராமகிருஷ்ணன் (76) காலமானார்.

பதிப்புலக ஆளுமை என்று கூறப்படும் க்ரியா ராமகிருஷ்ணன், கரோனா பாதித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.

க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உள்ளிட்ட பல புத்தகங்களை வெளிக்கொணர்ந்தவர். புத்தகப் பதிப்புத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தியவர். இத்துறையின் முன்னோடியாகவும் விளங்கியவர் க்ரியா ராமகிருஷ்ணன்.

ந. முத்துசாமியுடன் இணைந்து கூத்துப்பட்டறை ஆரம்பித்தது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்ததும் குறிப்பிடத்தக்கது. மொழிக்காக இயங்கும் மொழி அறக்கட்டளையையும் க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கியவர்.

ADVERTISEMENT

க்ரியா ராமகிருஷ்ணனின் முயற்சியால் பிரெஞ்ச்சிலிருந்து நேரடி மொழிபெயர்ப்புகள் தமிழில் வந்தன. நவீன தமிழ் இலக்கியத்துக்கான பெரும் பங்களிப்பாக க்ரியா வெளியிட்ட பல மொழிபெயர்ப்பு நூல்கள் அமைந்துள்ளன.

ஆல்பர் காம்யுவின் 'அந்நியன்', முதல் மனிதன்,  சார்த்தரின் ' மீள முடியுமா?', ழாக் ப்ரவரின் 'சொற்கள்', ஜோஷ் வண்டேலூவின் அபாயம் என எண்ணற்ற படைப்புகள் தமிழ் வாசகர்களுக்குப் புத்துணர்வூட்டின.

ஐராவதம் மகாதேவன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், ந.முத்துசாமி துவங்கி இமையம் வரையிலான தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் நூல்களைக் க்ரியா வாயிலாக வெளியிட்டிருக்கிறார் ராமகிருஷ்ணன்.

Tags : obit
ADVERTISEMENT
ADVERTISEMENT