தமிழ்நாடு

தஞ்சாவூரில்  உணவகம் மீது நாட்டு வெடி வீச்சு: ஒருவர் காயம்

17th Nov 2020 09:17 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தையில் உணவகம் மீது திங்கள்கிழமை இரவு நாட்டு வெடி வீசப்பட்டதில் இளைஞர் காயமடைந்தார்.

தஞ்சாவூர் கரந்தை செங்கல்காரத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துக்குமார். இவர் கரந்தை பேருந்து நிறுத்தம் எதிரே உணவகம் நடத்தி வருகிறார்.

இவரது கடையில் திங்கள்கிழமை இரவு 10.45 மணியளவில் தஞ்சாவூர் அருகே ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் வெங்கடேஸ்வரன் (25) சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் இக்கடை மீது நாட்டு வெடியை  வீசிவிட்டு, இருவரும் தப்பிச் சென்றனர். பலகாரம் வைக்கக்கூடிய கண்ணாடி பெட்டி மீது நாட்டு வெடி விழுந்து சேதமடைந்தது. இதனால், கண்ணாடி தெறித்து அருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வெங்கடேஸ்வரன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்வு இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெடித்த நாட்டு வெடியைக் காவல் துறையினர் கைப்பற்றிச் சோதனையிட்டபோது, அதில் வெடி மருந்தும் பால்ரஸ் குண்டுகள் இருப்பதும் தெரியவந்தது. எனவே இது சாதாரண வகை நாட்டு வெடிதான் என காவல் துறையினர் கூறுகின்றனர்.

இச்சம்பவத்துக்கான காரணம் குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT