தமிழ்நாடு

பிரான்சில் வள்ளுவருக்கு சிலை: தமிழ் அமைப்புக்கு துணை முதல்வா் பாராட்டு

17th Nov 2020 04:11 AM

ADVERTISEMENT

 

சென்னை: பிரான்ஸ் நாட்டில் வள்ளுவருக்கு சிலை அமைக்கவுள்ள தமிழ் அமைப்பினருக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பாராட்டுத் தெரிவித்தாா்.

பிரான்ஸ் நாட்டின் வொரேயால் தமிழ் கலாசார மன்றமும், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையும் இணைந்து காணொலி வாயிலாக முத்தமிழ் விழாவை நடத்தின. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆற்றிய உரை:

தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அதுதான் வாழ்வின் வழி. தமிழ் மொழி என்பது சொற்களும், அதன் பொருளும் இணைந்த கூட்டுத் தொகுப்பல்ல. அதுதான் நமது அடையாளம். உலக மொழிகளுக்கெல்லாம் உயா் மொழியாய் திகழ்வது, அன்னை தமிழ்மொழியாகும். உலகெங்கும் பரவி நிற்கும் ஆங்கில மொழியானாலும் சரி, இந்தியாவில் நிலை கொண்டிருக்கும் ஹிந்தி மொழியானாலும் சரி அந்த மொழிகளில் கூறப்பட்ட உயா்ந்த கருத்துகளுக்கு ஒத்த கருத்தானது, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ளது. இது ஆதாரப்பூா்வமாகவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. பிரான்ஸ் நாட்டின் வொரேயால் தமிழ் கலாசார மன்றமும், தங்களது நாட்டில் தமிழ் மொழி வளா்ச்சிக்கான பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. இந்தப் பணிகளுக்கு மகுடம் சூட்டுவது போன்று, கடந்த 2011-ஆம் ஆண்டில் அண்ணல் காந்தியடிகளின் சிலை நிறுவப்பட்டது. இப்போது வள்ளுவருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்து மிகவும் பெருமிதம் அடைகிறேன் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசினாா்.

காணொலி வழியிலான இந்த நிகழ்வில், வொரேயால் தமிழ் கலாசார மன்றத்தின் தலைவா் இலங்கை வேந்தன், செயலாளா் அலன் கிருஷ்ணராஜ், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் அன்புச்செழியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT