தமிழ்நாடு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க நிபந்தனைகள் விதிப்பதா? ஸ்டாலின் கண்டனம்

13th Nov 2020 01:10 PM

ADVERTISEMENT

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க பல்வேறு கடும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்  பயிற்றுவிக்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. அரசு, “தமிழுக்குத் தனியொரு விதி” உருவாக்கி அறிவித்திருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வளவு கடும் கட்டுப்பாடுகளுடன்- தமிழ் பயிற்றுவிப்பது கூட ஆறாம் வகுப்பிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று,  தாய்மொழியைக் கற்பதற்கு எதிரான ஒரு நிரந்தரத் தடையை விதித்து- தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழக மாணவர்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்று மத்திய அரசு நினைப்பது, ஒட்டுமொத்தமாகத்  தமிழகத்திற்கும்- தமிழ்மொழிக்கும் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். சமஸ்கிருதத்தை, தமிழகத்தில் முடிந்த இடங்களில் எல்லாம் புகுத்தி விடத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு- தமிழ் மொழியை மட்டும் இவ்வாறு சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆகவே தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று - குறிப்பாக, புதிய கல்விக்கொள்கையைப்  புகழ்ந்து - தாய்மொழியில் கற்பது அந்தக் கொள்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம்  வாக்குறுதி அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

அந்தப் பள்ளிகளில், தமிழகத்தில் உள்ள தமிழாசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமித்து, மற்ற வகுப்புகள் போல் ஒவ்வொரு நாளும் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும்; எக்காரணத்தைக் கொண்டும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகள் நடத்துவதை நிறுத்திவிடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் சமையல் எரிவாயு முன்பதிவில் தமிழை முதலிடத்தில் வைக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழ் மீது அனாவசியமாக கை வைக்க வேண்டாம்! மீண்டும் ஒரு போராட்டக் களத்திற்குத் தமிழகத்தைத் தள்ளிவிட வேண்டாம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT