தமிழ்நாடு

நவ.20, 21-ல் பழனி கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட ஆட்சியர்

13th Nov 2020 04:13 PM

ADVERTISEMENT

 

பழனி முருகன் கோயிலில் நவ.20, 21 தேதிகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.15 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயலர் அலுவலர் கிராந்திகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 7 நாள்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில், 6ஆவது நாளில்(நவ.20)  சூரசம்ஹாரம், 7ஆம் நாளில் (நவ.21) திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய நிகழ்வுகள். நிகழாண்டிலும் வழக்கம்போல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக, சூரம்சம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகளில் மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி, யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகள் நடைபெறும் நாள்கள் நீங்கலாக, நவ.16 முதல் 19ஆம் தேதி வரையிலும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் காலை 8 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். நவ.20 மற்றும் 21 ஆகிய 2 நாள்கள் மட்டும் பழனி தண்டாயுதபாணி (மலைக்கோவில்), திருஆவினன்குடி திருக்கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 

அதேபோல், சூரசம்ஹார நிகழ்வின் போது கிரிவல வீதியில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இந்த 2 நாள்களும் கிரிவல வீதி பாதை, சன்னதியில் உள்ள அனைத்து வணிக கடைகளும் அடைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT