தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 35 பவுன் தங்கநகைகள் கொள்ளை 

11th Nov 2020 09:00 AM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 35 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு  தப்பி ஓடிய மர்ம நபர்களை நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் உள்ள கணேஷ் நகரில் வசித்து வருபவர்கள் ராம்குமார் - ஜெபகிருபா தம்பதியர். ராம்குமார் காந்திநகரில் பசுமை காய்கறி அங்காடி வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ராம்குமாரின் மனைவி வீட்டில் தன் இரண்டு குழந்தைகளுடன் தனியாக இருந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த அறிமுகமில்லாத நான்கு மர்ம நபர்கள் ராம்குமார் அழைப்பிதழ் அளிக்க சொன்னார் எனக் கூறியுள்ளனர். அதை நம்பிய ஜெபகிருபாவும் அவர்களை வீட்டின் உள்ளே அழைத்துள்ளார். உள்ளே நுழைந்ததும் மர்ம நபர்கள், திடீரென ஜெபகிருபாவின் வாயில் செல்லோடேப் கொண்டு ஒட்டியும், கயிறு கொண்டு அவரைக கட்டி போட்டதுடன், கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கழுத்து, காதில் அணிந்திருந்த ஐந்து பவுண் தங்க நகைகளைப் பறித்துள்ளனர்.

ADVERTISEMENT

பின்னர்  அவரிடம் பீரோ சாவியை கேட்டு குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இதனால் உயிருக்கு அஞ்சிய ஜெபகிருபா பீரோ சாவியைத் தந்து விட, பீரோவைத் திறந்த மர்மநபர்கள் உள்ளே இருந்த முப்பது பவுண் தங்கநகைகளை எடுத்துக்கொண்டு ஜெபகிருபாவையும் அவரது குழந்தைகளையும் வீட்டின் உள்ளே வைத்து வெளியே பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். 

இதில், ஜெபகிருபா வீட்டிலிருந்து மர்மநபர்கள் ஓடியதைக் கண்ட அங்கிருந்தவர்கள், ஜன்னல் வழியே உள்ளே பார்த்தபோது ஜெபகிருபா கட்டிப்போடப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டவர்கள் உடன், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தப்பி ஓடிய மர்மநபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : Aruppukottai Woman robbed
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT