தமிழ்நாடு

'திருவண்ணாமலை மகா தீபம், தேர்த் திருவிழா பற்றி நவ.12-க்குள் இறுதி  முடிவு'

11th Nov 2020 02:52 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மகா தீபம் மற்றும் தேர்த் திருவிழா நடத்துவது குறித்து வியாழக்கிழமைக்குள் (நவ.12) இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் வட தமிழகத் துணைத் தலைவர் வி.சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர்த் திருவிழாவை நடத்த தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கமான முறைப்படி வரும் நவம்பர் 17-ஆம் தேதி கொடியேற்றம் நடத்தப்பட்டு தீபத்திருவிழா, மற்றும் தேர்த்திருவிழா நடத்த வேண்டும். 

ADVERTISEMENT

இதுதொடர்பாக கடந்த நவம்பர் 7-ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களை அனுமதிக்காமல் கோயில் நிகழ்வுகளை நடத்தலாம் எனவும், கோயில் வளாகம் மட்டுமல்லாமல் மாட வீதிகளிலும் தேர்த் திருவிழாவை நடத்த உத்தரவிட வேண்டும். அரசு உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு பூரி ஜெகந்நாதர் திருவிழா நடத்தியது போன்று அண்ணாமலையார் கோயில் விழாக்களையும் நடத்த வேண்டும் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், மாவட்ட நிர்வாகத்தால் பிற ஊர்களிலிருந்து வரும் பக்தர்களை கட்டுப்படுத்தலாமே தவிர, திருவண்ணாமலையில் உள்ள உள்ளூர் மக்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக மனுதாரர் அமைப்பு என்ன நடவடிக்கை எடுத்தது? அனைத்தையும் காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்கக் கூடாது எனத் தெரிவித்தனர்.

அப்போது அரசு வழக்குரைஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், கோயில் விழாக்கள் நடத்துவது குறித்து அக்டோபர் 30 -ஆம் தேதி பிறப்பித்த அரசாணையில் கோயில் நடைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த விழாவை எப்படி நடத்த வேண்டும் எனக் கோயில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அப்போது அண்ணாமலையார் கோவில் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஸ்ரீராம், வழக்கமாக 17 நாட்கள் விழாவில் நாளொன்றுக்கு  ஒரு லட்சம் பேர், தேர்த் திருவிழாவில் 5 லட்சம் பேர், மகா தீபத்தன்று 20 முதல் 25 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார். ஆனால், இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளைக் கருத்தில் கொண்டு பூஜைகள் அனைத்தும் முறையாக நடத்தப்படும். தேர்த் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்காமல் உற்சவரை வைத்து கோயிலுக்குள் மட்டுமே நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  

தீபத்திருவிழா எப்படி நடத்துவது என்பது குறித்து கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழக அரசு, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் கலந்துகொள்ளும் கூட்டம் புதன்கிழமை நடத்தப்படுகிறது. வியாழக்கிழமைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீபத் திருவிழா மற்றும் தேர்த் திருவிழா குறித்து கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைத் தெரிவிக்கக் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT