தமிழ்நாடு

நீட் விவகாரத்தில் மாணவர்கள் நீதிமன்றம் சென்றால் ஆதரவு: புதுச்சேரி முதல்வர்

11th Nov 2020 03:46 PM

ADVERTISEMENT

 

நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள், உள் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் சென்றால் அரசு அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என புதுச்சேரி முதல்வர் கூறினார்.

காரைக்கால் பகுதியில் உள்ள விழிதியூர் கிராமம், ஸ்ரீ சந்தைவெளி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி காரைக்காலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

கரோனா சிகிச்சையில் நாட்டிலேயே குணமடைந்தோர் புதுச்சேரியில் 96 சதவீதமாகும். நாட்டிலேயே அதிகளவில் பரிசோதனை செய்த மாநிலமாகவும் புதுச்சேரி திகழ்கிறது. 14.50 லட்சம் மக்கள் தொகையில் 3.50 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்புக்காகப் பாடுபட்ட மருத்துவக் குழுவினர், தொடர்புடைய துறையினர் நன்றிக்குரியவர்கள்.

ADVERTISEMENT

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புகள் கிடைக்காத நிலை காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அமைச்சரவையில் முடிவு செய்து அரசாணை வெளியிடுவதற்காகத் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் கொள்கை முடிவு என கூறி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். இது விதிகளுக்குப் புறம்பானது.

இது குறித்து உள்துறை அமைச்சர், உள் துறைச் செயலரைச் சந்தித்து இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் நீதிமன்றம் சென்றால், அரசு அவர்களுக்கு சாதகமாக இருக்கும். 

இடஒதுக்கீடு விவகாரத்தில் புதுச்சேரி பாஜக இரட்டை வேஷம் போடுகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத நிலை, துணை நிலை ஆளுநரின் குறுக்கீடு, செயல்படாத எதிர்க்கட்சி இவற்றையெல்லாம் சமாளித்து 9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம். 

ஓரிரு நாள்களுக்கு முன்னர் காரைக்கால், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது காற்றின் வேகத்தால் திசை மாறி சென்றதால் இலங்கை கப்பற்படையால் பிடிக்கப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். மாவட்ட ஆட்சியரும் தூதரகத்துடன் பேசியுள்ளார். இந்நிலையில், மீனவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்கள் நாளை காலைக்குள் வந்து சேர்வார்கள். 

வாக்குப்பதிவு இயந்திர குளறுபடிகள் குறித்து அனைத்துக் கட்சிகளும் பல்வேறு விமர்சனங்கள், கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், வாக்குச் சீட்டு முறையைப் பின்பற்றுவதே  சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாக அமையும்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடாக மற்றப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற முயல்வது தொடர்பாக எழுந்த புகார்கள் குறித்து ஜிப்மர் இயக்குநரிடம் தெரிவித்துள்ளேன். புதுச்சேரி ஆட்சியரிடமும் இது தொடர்பாக விசாரித்து, தவறான முறையில் யாரும் இடம்பெற்றிருந்தால் அதை ரத்து செய்ய  உத்தரவிட்டுள்ளேன். ஜிப்மர் இயக்குநரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

பிகாரில் நரேந்திர மோடியின் அலை வீசியிருந்தால் ராஷ்டிரிய ஜனதா தளம் அதிக இடங்களில் வென்றது எப்படி? இரு கூட்டணிகளுக்குமான இடைவெளி குறைவாக இருப்பது ஏன்? மோடி அலை என்பது மாயை.  மதக் கலவரத்தை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடன் தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்துகிறது என்றார் முதல்வர். பேட்டியின்போது வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உடனிருந்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT