தமிழ்நாடு

ஏத்தாப்பூர் அருகே கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை: மூவர் கைது

11th Nov 2020 02:14 PM

ADVERTISEMENT

வாழப்பாடி: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே கோவில் பூட்டை உடைத்து சுவாமி சிலைகள், தங்க நகைகளை திருடிய இளைஞர்கள் மூவரை போலீஸார் இன்று புதன்கிழமை காலை  கைது செய்தனர். மேலும் சிலை, வேல், வெள்ளி கிரீடம், காசு மாலை தங்கநகைகளை மீட்டனர்.

ஏத்தாப்பூர் அருகிலுள்ள கல்லேரிப்பட்டி மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 8 ஆம் தேதி பூட்டை உடைத்து புகுந்த மர்ம கும்பல், மாரியம்மன் வெண்கலச் சிலை, முருகன் வேல்,  மாரியம்மனின் வெள்ளி கீரீடம், காசு மாலை, தாலி குண்டு உள்ளிட்ட தங்க நகைகளை திருடிச் சென்றது.

இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் ஊர் பிரமுகர் ராஜேந்திரன் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த ஏத்தாப்பூர் போலீஸார், கோவிலில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் (38), ஏத்தாப்பூர் மூலமுடக்கு பகுதியைச் சேர்ந்த ராகவன்(21),  செந்தில்குமார் (35) ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு கோவில் பூட்டை உடைத்து, சுவாமி சிலை, வெள்ளி, தங்கநகைகளை கொள்ளையடித்து பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து, வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் வேல்மணி, ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன், உதவி ஆய்வாளர் சதீஸ்குமார், குற்றத்தடுப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் உதயக்குமார், காவலர் துரைமுருகன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர், கோவிலில் கொள்ளையடித்த முனிராஜ், ராகவன், செந்தில்குமார் ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை காலை கைது செய்தனர். அம்மன் சிலை, வேல், வெள்ளி, தங்க நகைகளை மீட்டனர்.
கோவிலில் இருந்து கொள்ளைப்போன அம்மன் சிலை மற்றும் வெள்ளி தங்க நகைளை மீட்டுக் கொடுத்து போலீஸாருக்கு கல்லேரிப்பட்டி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : கொள்ளை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT