தமிழ்நாடு

தமிழகம் திரும்ப விரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள்: முதல்வர் பழனிசாமி

11th Nov 2020 02:32 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால், வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பணிபுரிய ஆர்வம் கொண்டுள்ள சூழ்நிலையில், பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீண்டும் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியமர்த்தி வருகிறார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை: தமிழக அரசு கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஒன்றரை மாதத்திற்கு முன்பு அதிகமான அளவில் கரோனா வைரஸ் தொற்று பரவல் இருந்தது. அரசு அறிவித்த ஆலோசனைகளை பின்பற்றி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை இணைந்து துரிதமாக பணியாற்றியதன் விளைவாக கரோனா வைரஸ் பரவல் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இதையும் படிக்கலாமே.. 'பிகாரில் நிதிஷ் குமாரின் வெற்றியை உறுதி செய்தது இவர்கள்தானாம்'

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். தேவையான மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்கு உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழு வழங்குகின்ற ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணிபுரிகின்ற நம்முடைய மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் அதனை பின்பற்றிய காரணத்தினால், இந்த வைரஸ் நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, தமிழகத்திலும் சரி, தூத்துக்குடி மாவட்டத்திலும், கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து, இயல்பு நிலை திரும்புகின்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறையை பொறுத்தவரை 100 சதவிகித பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளலாம் என்று அரசால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 100 சதவிகித பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக வேளாண் விளைச்சல் அதிகரித்துள்ளது. பருவமழையும் சாதகமாக பொழிந்த காரணத்தினால், விவசாயிகள் நல்ல விளைச்சலைப் பெற முடிந்தது.

அதேபோல தொழிற்சாலைகளுக்கும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது 100 சதவிகித பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று தளர்வு வழங்கி தொழிற்சாலைகளில் பணிகள் துவங்கியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து தங்கியிருந்து, தொழிற்சாலைகளில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்பட்டவுடன் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தன் அடிப்படையில் அவர்களை எல்லாம் அரசின் செலவிலேயே சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தோம். இப்பொழுது தமிழகத்தில் படிப்படியாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் குறைந்து வருவதால், வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பணிபுரிய ஆர்வம் கொண்டுள்ள சூழ்நிலையில், பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீண்டும் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தி வருகிறார்கள்.

இதையும் படிக்கலாம்.. பள்ளி, கல்லூரிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு: தமிழக அரசு தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை வேளாண் தொழில், மீன்பிடித் தொழில், உப்பு உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளன. உப்பு உற்பத்தி தொழிலை பொறுத்தவரை, தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது தூத்துக்குடி மாவட்டம் ஆகும். மீன்பிடி தொழிலும் இங்கே அதிக அளவில் உள்ளது. மீனவர்களின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. கடல் அரிப்பை தடுப்பதற்கு தடுப்புச்சுவர், தூண்டில் வளைவுகள் போன்றவை கூடுதலாக அமைப்பதற்கு அரசின் பரிசீலனையில் உள்ளது.

மாணவர்கள் உயர்கல்வி படிப்பிற்காக புதிய கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக இன்று காலையில் அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சையின் மூலமாக சிகிச்சை அளிப்பதற்கு, உயர்தர மருத்துவ கருவிகளை மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தேன்.

அதேபோல, அரசு ஏரிகள், குளங்கள், ஊரணிகள் அனைத்தையும் தூர்வார வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை அறிவித்து, அதனையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக தூர் வாராத ஏரிகள், குளங்கள் தற்போது தூர்வாரப்பட்டு, பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளோம். பருவக்காலங்களில் பொழிகின்ற மழை நீர் ஓடைகள் நதிகளின் வழியாக வீணாக கடலில் கலப்பதை தடுத்து தடுப்பணைகள் கட்டி, நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக மூன்று ஆண்டு கால திட்டமாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. பொதுப்பணித் துறையின் சார்பாக அரசு பல்வேறு கட்டடப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல கூட்டு குடிநீர் திட்டங்கள் இந்த மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல நிறைய புதிய திட்டங்களை துவக்க இருக்கின்றோம்.

திருச்செந்தூர் வட்டம், ஆலந்தலை கிராமத்தில் ரூபாய் 52.60 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் மக்கள் அரசு அலுவலர்களை சந்திப்பதற்கு பதிலாக, அரசு அலுவலர்கள் மக்களை சந்தித்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை துவங்கி வைத்தேன். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட நிர்வாகமும் அந்த பணியை சிறப்பாக செய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெறப்பட்ட 12628 மனுக்களில் 5426 தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது இலவச வீட்டு மனைபட்டா கோரி பெறப்பட்ட 4796 விண்ணப்பங்களில், தகுதியான 3225 மனுக்கள் ஏற்கப்பட்டு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் அல்லிக்குளம் பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. விளாத்திகுளம் வட்டம், வைப்பார் கிராமத்தில் ஒரு தொழில் பூங்கா அமைக்க 1019 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் சிப்காட் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பூங்காவின் மூலம் சுமார் ரூபாய் 2000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். 

சென்னை - கன்னியாகுமரி தொழில் பெருவழி திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் -பாளையங்கோட்டை வரை சுமார் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு பல திட்டங்கள் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.

திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதி வேண்டும் என்று வைத்த கோரிக்கையையும் அரசு நிறைவேற்றி கொடுத்திருக்கிறது. சாத்தான்குளம் நகரத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக குடிமராமத்து திட்டத்தின் கீழ், பல குளங்கள், ஊரணிகள் தூர்வாரப்பட்டு இருக்கின்றன.

“ஜல் ஜீவன் மிஷன்” திட்டத்தின் கீழ் 2020-21ஆம் ஆண்டில் 226 ஊராட்சிகளில் உள்ள 875 குக்கிராமங்களில் 1 லட்சத்து 43 ஆயிரம் வீடுகளுக்கு 71.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கிட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு பல திட்டங்கள் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் பல்வேறு திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு கொண்டுவருவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
 

Tags : TN CM palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT