தமிழ்நாடு

"இல்லங்களில் பேசினால்தான் உள்ளங்களில் தமிழ் வாழும்'

11th Nov 2020 03:17 AM

ADVERTISEMENT

இல்லங்களில் பேசினால்தான் உள்ளங்களில் தமிழ் வாழும் என தில்லி தமிழ்ச்சங்க முன்னாள் துணைத் தலைவர் கே.வி.கே. பெருமாள் தெரிவித்தார். 
புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில், "ஏழு கண்டங்களும், உலக செம்மொழித் தமிழ் எதிர்காலவியலும்' எனும் தலைப்பில் இணையவழி பன்னாட்டு தமிழ்க் கருத்தரங்கில் கே.வி.கே. பெருமாள் திங்கள்கிழமை பேசியது: "திரை கடலோடியும் திரவியம் தேடு' என்பதற்கிணங்க பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களாக உள்ளனர். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் தான். அந்தந்த நாடுகள், ஊர்களில் பேசும் உள்ளூர் மொழிகளைப் பேசுவதும் தவிர்க்க இயலாது. இல்லங்களில் பேசுவது தாய்மொழி தமிழாக இருத்தல் அவசியம். தமிழைப் பாதுகாக்க அது ஒன்றுதான் தலையாய வழிமுறை. ஆப்பிரிக்கா, மோரீஷஸ் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பெயர் சூட்டுதல், பொங்கல் விழாக்களைக் கொண்டாடுவதில் நமது கலாசாரத்தை கடைப்பிடிக்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தமிழ்பேசத் தெரிவதில்லை.
புதுதில்லியில் வசிக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களில், 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள். இவர்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்படுவதால் தாய்மொழியில் பேச அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. எம்ஜிஆர் ஆட்சியின்போது உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் தமிழக அரசின் உதவியுடன் ஆசிரியர் நியமிக்கப்பட்டு, தமிழ் கற்றுக்கொடுக்கப்பட்டது. தமிழை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். 
எனவே, புலம்பெயர் தமிழர்களை அடையாளங்கண்டு அங்கு தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும். இல்லங்களில் தமிழ் பேசினால்தான் உள்ளங்களில் தமிழ் வாழ முடியும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT