தமிழ்நாடு

வேல் யாத்திரை முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை: உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு தகவல்

10th Nov 2020 03:53 PM

ADVERTISEMENT

வேல் யாத்திரை கோவில் யாத்திரை அல்ல, அது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என தமிழக டிஜிபி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 

தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

ஆனால், கரோனா பரவல் காரணமாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து குறைந்த அளவு நபர்களே செல்வோம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், விதிகளை மீறியதால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டிஜிபி தரப்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

அதில், வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'பாஜக தலைவர் எல்.முருகன் பல இடங்களில் முகக்கவசம் அணியவில்லை. தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. யாத்திரையில் பங்கேற்போர் ஒருவர் கூட முகக்கவசம் அணியவில்லை. 

பல இடங்களில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அவர்கள் பேப்பரில் கொடுத்ததும், நீதிமன்றத்தில் சொல்வதும் வெவ்வேறாக உள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டருக்கு குறைவாகவே அவர்கள் சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

வேல் யாத்திரை, கோவில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே' என வாதிடப்பட்டது. 

தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags : Madras HC
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT