தமிழ்நாடு

முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவின் முன்ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது

9th Nov 2020 03:39 PM

ADVERTISEMENT

சென்னை: நடிகர் சூரி கொடுத்த பண மோசடி புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார்.

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தில் நடிகர் சூரியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக ரூ.40 லட்சம் அவருக்கு சம்பளம் தரவேண்டும். இந்த பணத்துக்கு பதில் சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாக கூறி சூரியிடம் கூடுதலாக ரூ.2.70 கோடி பெற்று, அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோர் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நடிகர் சூரி அளித்த புகாரின் பேரில் அடையாறு காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். 

பின்னர் இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் காவலர்கள் தங்களை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை, எனவே வேறு நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டார்.  

இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ரமேஷ் குடவாலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் முன் ஜாமீன் கோரிய மனு தொடர்பாக வரும் நவம்பர் 26 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

ADVERTISEMENT

Tags : high court
ADVERTISEMENT
ADVERTISEMENT