தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்

1st Nov 2020 10:36 AM

ADVERTISEMENT

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
மூச்சுத் திணறல் காரணமாக வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு ( 72) கடந்த அக்.13-ஆம் தேதி சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அருவக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா். 90 சதவீத நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சனிக்கிழமை இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானாா். இந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், வேளாண்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு அவர்கள் மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந் துயருற்றேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
பொதுவாழ்வில் உள்ள அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். இப்போதும் அதையே வலியுறுத்தி - தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட  பொதுவாழ்வில் உள்ள அனைவரும், அனைத்து அரசியல் கட்சியினரும், சுய பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகிட  வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் துரைக்கண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - சக அமைச்சர்களுக்கும், முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக வேளாண்துறை அமைச்சரும், அதிமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டிருந்தவர். கடந்த 13-ஆம் தேதி திண்டிவனம் அருகே மகிழுந்தில் சென்ற போது உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர், உடனடியாக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின் பயனாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்  உயிரிழந்து விட்டார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது.
மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கின்ற பண்பாளர். அவரது மறைவினால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

Tags : ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT