தமிழ்நாடு

போக்குவரத்து இயக்கம்: பேருந்துகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வெளியீடு!

31st May 2020 01:25 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 1 முதல் பொதுப் போக்குவரத்தை நடைமுறைப்படுத்த மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏழாவது மற்றும் எட்டாவது மண்டலங்கள் தவிர மற்ற ஆறு மண்டலங்களிலும் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் போக்குவரத்து இயக்கம் குறித்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மண்டலங்களுக்கு உள்ளே மட்டுமே பேருந்து இயக்கப்படும். 

ADVERTISEMENT

► அதன்படி, ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும். மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம். 

► மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, ரயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. 

► பேருந்துகளை இயக்குவதற்கு முன்பு ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அவர்கள் முகக்கவசம், கையுறை உள்ளிட்டவை அணிந்திருக்க வேண்டும்.

► அனைத்து பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் நாள் ஒன்றுக்கு இருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பேருந்துகளில் கிருமிநாசினி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

► மண்டலத்திற்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை. குளிர்சாதனப் பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும். 

► பயணிகள் அனைவரும் பின் படிக்கட்டுகள் வழியாக ஏறி முன்பக்கம் வழியாக இறங்க வேண்டும். குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும்.

► பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். 

► கூடுமானவரை மாதாந்திர பாஸ்களை ஊக்குவிக்க வேண்டும்.

போக்குவரத்துக்காக பிரிக்கப்பட்ட 8 மண்டலங்கள்:

* முதல் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் 

* இரண்டாவது மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி

* மூன்றாவது மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி

* நான்காவது மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை

* ஐந்தாவது மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்

* ஆறாவது மண்டலம்: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

* ஏழாவது மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

* எட்டாவது மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி 

Tags : TN Govt
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT