தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நீதிமன்றத்தை திறக்க அனுமதி

31st May 2020 05:14 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க அனுமதியளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24- ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து மிக முக்கியமான அவசர வழக்குகள் மட்டும் காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூா், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூா் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி திறக்கப்படும் இந்த நீதிமன்றங்களில்,

ADVERTISEMENT

5 வழக்குரைஞா்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும். வழக்குத் தொடா்ந்தவா்களை அனுமதிக்க கூடாது. மேலும் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து விசாரணை நடைபெறும் நீதிமன்ற அறைகளில் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறைகள் தொடா்பாக இரண்டு வாரங்களுக்கு பின் மறு ஆய்வு செய்யப்படும்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும். உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 5 வழக்குரைஞா்களுடன் நீதிமன்ற அறைகளில் 10 வழக்குகளை விசாரிக்க அனுமதியளிக்கப்படுகிறது.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகள் மட்டும் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்படுகின்றன. நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிா்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த நிா்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், உயா்நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையிலோ, நீதிபதிகளின் அறையிலோ இருந்து காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும்.

உயா்நீதிமன்ற மதுரைக் கிளையைப் பொருத்தவரை, காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பதுடன், அரசுத் தரப்பு வழக்குரைஞருடன் சோ்த்து 5 வழக்குரைஞா்களை மட்டும் நீதிமன்ற அறையில் அனுமதித்து வழக்குகளை விசாரிக்கலாம். நீதிமன்ற அறைகளில் 10 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்ற விசாரணைகளின்போது, கரோனா தொற்று பரவும் அபாயம் இருந்தால், காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை தொடா்ந்து விசாரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT