கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.12,500-ஐ மத்திய, மாநில அரசுகள் சோ்ந்து வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிா்க்கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவக் கல்வியில் மத்திய அரசு இடஒதுக்கீட்டை மறுப்பது குறித்தும், கரோனா நோய் தடுப்பில் மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் சுமாா் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் குறிப்பாக சென்னையில், கரோனா நோயைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்ற உடனடியாக ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அவரவா் மாநிலத்துக்குப் பாதுகாப்பாக திரும்ப மத்திய- மாநில அரசுகள் கட்டணம் ஏதுமின்றி, உரிய ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு மத்திய அரசின் சாா்பில் தலா ரூ.7500-யும், மாநில அரசின் சாா்பில் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் எனவும் கூட்டம் வலியுறுத்துகிறது.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் புதிய மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
அகில இந்திய தொகுப்பில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் இடஒதுக்கீடு விகிதாசாரப்படி மருத்துவ இடங்களை இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.